கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணிகளை சேர்ந்த வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி கோப்பையை தக்க வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அவரது வேண்டுகோளின் பேரில் அணியில் இணைந்துள்ளார்.
இப்படி ஓய்விலிருந்து மீண்டு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்ததோடு, உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அதேபோன்று சில திட்டங்களை மேலும் சில நாடுகள் எடுத்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் இந்திய அணியிலும் இந்த உலகக்கோப்பை தொடருக்காக கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ள ஒரு சில வீரர்களை பற்றி இங்கு காணலாம்.
ஷிகர் தவான்: அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஷிகர் தவான் தான். எப்போதுமே ஐசிசி தொடர் என்றால் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரராக பார்க்கப்படும் ஷிகர் தவான் கடந்த சில ஆண்டுகளாகவே முதன்மை ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் இடதுகை துவக்க வீரர் என்பதனாலும் ரோகித் சர்மாவுடன் பல ஆண்டுகள் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் கொண்டவர் என்பதனாலும் அவர் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது.
அஸ்வின்: அதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் இருக்கிறார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகால அனுபவம் உள்ள அவர் சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி பின் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதனாலும் இவரும் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்புள்ள வீரராக பார்க்கப்படுகிறார்.
ரிஷப் பண்ட்: மூன்றாவது வீரராக இந்த பட்டியலில் இருப்பவர் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி கடந்த எட்டு மாதங்களாக எந்தவித போட்டியிலும் பங்கேற்காமல் சிகிச்சை மற்றும் ஓய்வினை எடுத்து வரும் அவர் அண்மையில் பேட்டிங் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். எனவே இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவர் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெற்றால் அவரும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.