கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகள் என வரும்போது இந்திய அணி செய்து வரும் சாதனைகளை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. டெஸ்ட் போட்டிகள் என வரும்போது அதிகம் அனுபவம் இருக்கும் வீரர்கள் தான் கலக்குவதாக அதிகம் கேள்விப்பட்டிருப்போம். மிக அரிதாக தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என இளம் வீரர்கள் ஜொலித்திருந்தனர்.
ஆனால் இந்திய அணியை பொறுத்தவரையில் சமீப காலமாக இளம் வீரர்களின் பங்கும் டெஸ்ட் போட்டிகள் வரை பெரிதாக இருந்து வருகிறது. ஜெய்ஸ்வால், கில், ஆகாஷ் தீப் என தலையிடும் வீரர்களும் கூட தங்களுக்கு கிடைக்கும் குறுகிய வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்தி வெற்றிகளையும் குவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் கூட இளம் வீரர்களின் பங்கு தான் அதிகமாக இருந்து வந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது ஜெய்ஸ்வால், கில், பந்த் உள்ளிட்ட பலரின் ஆட்டமும் இந்திய அணிக்கு தூணாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 12 ஆண்டுகளில் 18 டெஸ்ட் போட்டித் தொடர்களை தங்கள் சொந்த மண்ணில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஒரு தொடரை கூட இழந்தது கிடையாது. வேறு எந்த அணிகளும் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை தங்கள் சொந்த மண்ணில் வென்றது கிடையாது என்ற நிலையில் இன்னும் அசைக்க முடியாத அணியாக தான் இந்தியா இருந்து வருகிறது.
அப்படி ஒரு சூழலில் 12 ஆண்டுகளாக இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த முடியாமல் இருப்பதற்கு இரண்டு வீரர்கள் முக்கிய காரணம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதற்கு பின் பேசியிருந்த ஆகாஷ் சோப்ரா, “இந்திய அணி 18 டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அப்படி பார்க்கையில் அவர்கள் மிக மிக அபாரமாக உள்ளனர்.
இப்படி வெற்றி பெறுவதெல்லாம் மற்ற அனைத்திலும் இருந்து மாறுபட்டு நின்று வருகிறது. எதிரணியினர் இந்திய மண்ணில் வெற்றி பெறுவதை விடுங்கள். அவர்களால் இந்தியாவை எதிர்த்து போட்டியை டிரா கூட செய்ய முடியவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரை இழந்திருந்தோம். அதன் பின்னர் இந்த 12 வருடங்களில் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் என பலரும் மாறி விட்டார்கள்.
ஆனால் இந்திய அணி தொடர்ச்சியாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எதிரணியினரின் 20 விக்கெட்டுகளையும் இந்தியாவால் சொந்த மண்ணில் எடுக்க முடிகிறது. இந்தியா இப்படி தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் எழுச்சி முக்கிய காரணம். 525 விக்கெட்டுகளை நெருங்கியுள்ள அஸ்வின், 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக இருக்கும் அஸ்வின், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அபாரமாக இருந்து வருகிறார். ரவீந்திர ஜடேஜாவும் 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை டெஸ்டில் எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்தவே விடுவதில்லை. புஜாரா, ரஹானே மற்றும் கோலி ஆகியோரும் அதிக ரன் குவித்தவர்கள்” என ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.