கிரிக்கெட் அரங்கில் மிகவும் அமைதியான வீரராக கருதப்பட்டு வருபவர் தான் சச்சின் டெண்டுல்கர். பார்ப்பதற்கு குழந்தை போல சிரித்த முகத்துடன் இருக்கும் சச்சின், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான வீரராக இருந்ததுடன் மட்டுமில்லாமல் அவரது பல சாதனைகளை உடைப்பதும் இன்று ஆடும் வீரர்களுக்கு கடினமாக தான் இருந்து வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய சமயத்திலேயே அவர் கோபப்பட்டு பெரிதும் உடன் ஆடும் வீரர்கள் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அரிதாகவே கோபத்துடன் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை டிராவிட் கொந்தளிக்க வைத்து மிகப்பெரிய சர்ச்சை சம்பவம் உருவானது பற்றி முன்னாள் வீரர் ஒருவர் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு சர்ச்சை சம்பவம் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்திருந்தது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, முதலில் ஒரு நாள் தொடரை ஆடி வந்த போது கேப்டன் கங்குலிக்கு காயம் ஏற்பட அதன் பின்னர் ஆரம்பமான டெஸ்ட் தொடரில் அவர் தலைமை தாங்கவில்லை. இதனால் ராகுல் டிராவிட் கேப்டனாக செயல்பட, அப்போது 194 ரன்களில் சச்சின் பேட்டிங் செய்த கொண்டிருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்திய அணியின் ஸ்கோர் 675 ரன்களாக இருக்க, இரட்டை சதம் அடிக்க இருந்த சச்சின் களத்தில் இருக்கும் போது ராகுல் டிராவிட் டிக்ளேர் என அறிவித்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சச்சினும் விரக்தியில் இருக்க இது பற்றி தற்போது ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்த ஆகாஷ் சோப்ரா, “நான் அப்போது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தேன். ஆனால் அவர்களுக்கு இடையேயான உரையாடலில் நான் இருக்கவில்லை. இளம் வீரராக இருந்ததால் அதற்குள் செல்ல வேண்டாம் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் அன்றைய தினம் விரக்தியில் தான் இருந்தார்.
இந்த அளவுக்கு அவர் கோபமாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. அப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை. கேப்டனாக ராகுல் டிராவிட் அந்த முடிவை எடுத்திருந்தாலும் நிச்சயம் கங்குலியும் அதற்கு பங்கு வகித்திருப்பார். அவர் இல்லாமல் ராகுல் டிராவிட் நிச்சயம் தனியாக இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்.
அந்த போட்டிக்கு பின்னர் பேசி இருந்த ராகுல் டிராவிட் நான்காவது நாளிலேயே போட்டி முடியும் என தெரிந்திருந்தால் நிச்சயம் டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.