உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 இந்திய வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடதுகை தொடக்க வீரர் ஷிகர் தவானின் பெயர் இல்லதாததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2013 முதல் 2019 வரை இந்தியா ஆடிய அனைத்து ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் இடம்பிடித்து பேட்டிங்கில் அசத்தியவர் ஷிகர் தவான். குறிப்பாக ஓபனிங்கில் நல்ல ரன்களை தருவதோடு மட்டுமில்லாமல், நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் 363 ரன்களும், 2015 உலகக்கோப்பையில் 462 ரன்களும், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் 338 ரன்களும், 2019 உலகக்கோப்பையில் 125 ரன்களும் எடுத்துள்ளார்.
2019ல் காயம் காரணமாக அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கிட்டத்தட்ட ஐசிசி தொடர்களில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 65. அடித்த ரன்கள் 1238. இதனால் அவரை மிஸ்டர் ஐசிசி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டியே வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு காரணம், சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரது வருகைதான். அண்மையில் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருந்தனர். இதனால் ஷிகர் தவானுக்கு மாற்று வீரர்களாக இவர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.இருப்பினும் உலகக்கோப்பை போன்ற தொடரில் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான் அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், ஷிகர் தவானின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், “2027 உலகக்கோப்பை தொடர் வெகு தொலைவில் இருக்கிறது. இந்த கட்டத்தில் ஷிகர் தவானின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை எங்கே இருக்கிறது.
ஒருவேலை அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்யபடவில்லை என்றால் அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது கடினம். அவரது கதை அவ்வளவு தான், இனி அவர் இந்தியாவுக்காக விளையாட மாட்டார் என நான் கூறவில்லை. ஆனால் அவர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் தருவது சாத்தியமில்லை.இந்திய அணிக்காக அவர் சாதித்த விஷயங்களுக்காக ஷிகர் தவான் பெருமைப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இந்திய அணிக்காக இறுதியாக கடந்தாண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார் ஷிகர் தவான். இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் 44.11 சராசரியுடன் 6793 ரன்களை எடுத்துள்ளார். அதில் 17 சதங்களும், 39 அரைசதங்களும் அடங்கும்.