டி 20 உலக கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் ஆடும் போது நிச்சயம் யாரும் மிகப்பெரிய விறுவிறுப்பான போட்டியாக இது மாறும் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடரில் எந்த அணிகள் ஆடுவதை ரசிகர்கள் பரபரப்பாக பார்த்தாலும் உலக கோப்பை என வரும்போது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சிறிய அணிகள் ஆடும் போது அதனை பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் தான் இருப்பார்கள்.
ஆனால், இந்த போட்டியை பார்த்தவர்கள் அதிர்ஷ்டமான ரசிகர்கள் என்பதுடன் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு போட்டியை பார்த்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அமெரிக்க அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தொடங்கிய கனடா அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணி, முதல் ஓவரிலேயே விக்கெட் இழக்க 8 ஓவர்கள் முடிவில் 48 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தனர்.
இரண்டு விக்கெட்டுகளையும் அவர்கள் இழக்க, மீதம் இருக்கும் இலக்கை 10 ஓவர்களுக்குள் எட்டிப்பிடித்தனர். அதுவும் கடைசி 58 பந்துகளில் அமெரிக்கா அணி, 149 ரன்களை சேர்த்திருந்தனர். ஆனால் அதனை மிக சர்வசாதாரணமாக ஆண்ட்ரியாஸ் கோயஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் என இரண்டு பேரும் கையாண்டு இருந்தனர்.
இதில் ஆண்ட்ரியஸ் கோயஸ் சற்று நிதானமாக பொறுப்பை உணர்ந்து ரன் சேர்க்க, இன்னொரு பக்கம் ஆரோன் ஜோன்ஸ் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தார் என்றே சொல்லலாம். அமெரிக்கா இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருப்பதால் அவர்களை எதிர்க்க தயார் என சொல்லாமல் சொல்லி உள்ளார்.
முதல் போட்டியிலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டு முத்திரை பதித்துள்ளார் ஆரோன் ஜோன்ஸ். இவரும் 40 பந்துகளில் 94 ரன்கள் எடுத்ததுடன் மட்டுமில்லாமல், மொத்தம் 10 சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்தார். அத்துடன் டி20 உலக கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இன்னொரு புறம் தொடக்க வீரராக இல்லாமல் 10 சிக்ஸர்களை டி 20 உலக கோப்பையின் ஒரு போட்டியில் அடித்த முதல்வீரரும் ஆரோன் ஜோன்ஸ் தான். இந்நிலையில் டி 20 உலக கோப்பை வரலாற்றிலேயே எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் செய்ய முடியாத முக்கியமான ஒரு சாதனையும் தற்போது தன்வசம் ஆக்கி உள்ளார் ஆரோன் ஜோன்ஸ்.
யுவராஜ் சிங், விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, க்றிஸ் கெயில், ஹர்திக் பாண்டியா, மெக்கல்லம், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட பல அதிரடி பேட்ஸ்மேன்களும் டி 20 உலக கோப்பைத் தொடரில் ஆடியுள்ளனர். ஆனால் அவர்கள் யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத ஒரு முக்கியமான இடத்தை தான் ஆரோன் ஜோன்ஸ் பிடித்துள்ளார். டி 20 உலக கோப்பை போட்டியில் வெற்றிகரமாக சேசிங் செய்த அணிகளில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோராக ஆரோன் ஜேம்ஸின் 94 ரன்கள் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.