இந்தியா – நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி கன்டியில் நடைபெற்றுவருகிறது. கத்துக்குட்டியான நேபாளம் அணி முதன்முறையாக இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியின் மூலம் நேபாள அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஆசிஃப் ஷேக் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.
22 வயதே ஆன இவர், இன்றைய போட்டியில் மிக அற்புதமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற புதிய சரித்திரத்தை படைத்துள்ளார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் 98 பந்துகளில் பொறுப்புடன் ஆடி 8 பவுண்டரிகள் உடன் 58 ரன்கள் எடுத்தார். இந்த இளம் வயதில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உரிய இன்னிங்ஸ் ஆடினார்.
இந்தியாவுக்கு எதிராக சரித்திரம் படைப்பதற்கு முன்பே, தனது செயலால் இவர் உலக அளவில் பாராட்டப்பட்டார். கடந்தாண்டு நேபாளம், அயர்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் இறுதிபோட்டியில் நேபாளம் – அயர்லாந்து அணிகள் மோதின.
இதில், 19வது ஓவரின் போது அயர்லாந்து வீரர் ஆன்டி மெக்பிரைனை ரன் அவுட் செய்ய வாய்ப்பு ஆசிஃப் ஷேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. நேபாள வீரர் கமால் சிங் வீசிய பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த மார்க் அடையர் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க முயன்றார். அப்போது மறுமுனையில் இருந்த ஆன்டி மெக்பிரைன் ரன் ஓட முயற்சிக்கும்போது, கமால் சிங் பந்தை எடுக்க ஓடினார். அப்போது அவர் மீது மோதி மெக்பிரைன் கீழே விழுந்தார்.
உடனடியாக பந்தை எடுத்த கமால் சிங், விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷேக்கிடம் த்ரோ அடித்தார். ரன் அவுட் செய்ய நேரம் இருந்தும், க்ரீஸுக்குள் மெக்பிரைன் வரட்டும் என ஆசிஃப் ஷேக் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவிர்த்தார். பவுலருடன் மோதியதால் தான் இவரால் க்ரீஸுக்குள் வர முடியவில்லை என்பதை உணர்ந்து இவர் அவ்வாறு செயல்பட்டார்.
தனது செயலின் மூலம் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்பதை உணர்த்தினார். ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் உடன் நடந்துகொண்ட ஆசிஃப் ஷேக்கின் வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பலனாக, கடந்தாண்டு ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டர் விருதை வென்றார் ஆசிஃப் ஷேக்.
🏏 Spirit of cricket 🤝
Drop a ‘♥️’ below to show your appreciation for this golden gesture!
📺 Tune in to #FanCode and never miss moments like this again 👉 https://t.co/ccITeVbFiv@cricketireland @CricketNep pic.twitter.com/b4vzDyyyNU
— FanCode (@FanCode) February 14, 2022
தற்போது இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய அவர், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் உடன் நடந்துகொண்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையதளத்தில் உலாவருகிறது. 2019 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவு தரும்படி ரசிகர்களிடம் கோலி கேட்டுக்கொண்டார். அதற்காக கோலி ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.