ரோகித் சர்மா கேப்டன் ஆன பிறகு முதல் முறையாக ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அவர் வழிநடத்த இருக்கிறார். ஏற்கனவே இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை சந்தித்துள்ள ரோஹித் சர்மாவிற்கு இது மூன்றாவது தொடராக அமைய உள்ளது. 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியின் அங்கமாக உலக கோப்பை தொடரில் அவர் இருந்துள்ளார். இதில் 2019 ஆம் ஆண்டு அவர் ஐந்து சதங்களை விலாசி ஒரு சாதனையையும் படைத்திருந்தார்.
ஆசியக் கோப்பை போட்டியில் பார்மிற்கு திரும்பி உள்ள ரோஹித் சர்மா நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரிலும் சாதனைகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டி20 உலக கோப்பை சமயத்தில் இந்திய அணியின் முக்கிய பவுலரான பூம்ரா, காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
ஆனால் தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் தனது விக்கெட் டேக்கிங் பவுலரான பும்ரா அணியில் இடம்பெற்றுள்ளது ரோகித் சர்மாவிற்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள முன்னாள் தமிழக வீரரான அபிநவ் முகுந்த் கூறுகையில்,
என்னை கேட்டால் ரோகித் சர்மா, தான் பார்முக்கு திரும்பியதை காட்டிலும் பும்ரா அணியில் சேர்ந்ததுதான் அவருக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்திருக்கும். அவருடன் சேர்ந்து ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளதால் உலக கோப்பையிலும் அவர் இருப்பது ரோகித் சர்மாவிற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.
ரோகித் சர்மாவிற்கு விக்கெட் வேண்டுமென்றால் அவர் நேராக பும்ராவிடம் சென்று விடுவார். ஐபிஎல் போட்டிகளிலும் இது நடந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் டெத் ஓவர்களில் பும்ரா நிச்சயம் சோதிக்கப்படுவார். ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆடர் பேட்டர்கள் அடித்து ஆடும் போது நிச்சயம் பும்ரா பௌலிங் செய்யக்கூடும்.
காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு பும்ரா மீண்டும் பழைய மாதிரி பந்து வீசுவாரா என்ற சந்தேகம் பல எக்ஸ்பர்ட்டுகளுக்கு இருந்தது. நானும் கூட அப்படி எண்ணினேன். ஆனால் அவர் எப்படி விட்டு சென்றாரோ அப்படியே திரும்பி வந்துள்ளார். அவருடைய கம்பேக் நிச்சயம் சிறப்பாகவே உள்ளது என்று அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.