இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை தான் உருவாக்கி உள்ளது. ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா உள்ளிட்ட சில அதிரடி வீரர்கள் இருந்த போதிலும் இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் இருந்ததால் அவர்கள் நிச்சயம் பட்டையை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கில் தலைமையில் களமிறங்கியிருந்த இந்திய வீரர்களால் பெரிய அளவில் முதல் டி20 போட்டியில் ஜொலிக்க முடியாமல் போனது. அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், துருவ் ஜூரேல் உள்ளிட்ட வீரர்கள் இந்த போட்டியில் அறிமுகமாகியிருந்த நிலையில் சுப்மன் கில், ருத்துராஜ், கலீல் அகமது, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் என நிறைய பேர் இடம் பெற்றிருந்தது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கருதப்பட்டது.
இப்படி பல வீரர்கள் இருந்த போதிலும் இந்திய அணியால் 115 ரன்களை எட்ட முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். இந்த போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற அவர்களால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். ஆனால், தொடர்ந்து ஆடிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. ஐபிஎல் தொடரில் பல சர்வதேச பந்து வீச்சாளர்களை திணறடித்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி இருந்தார்.
மறுபடியும் கில் மட்டும் நிதானமாக ஆடி ரன் சேர்க்க, ருத்துராஜ் 7 ரன்னிலும், ரியான் பராக் 2 ரன்னிலும், ரிங்கு சிங் டக் அவுட்டும் ஆகியிருந்தனர். இதிலிருந்து இந்திய அணியால் மீள முடியாமல் போக கடைசி கட்டத்தில் சுந்தர் போராடி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 102 ரன்களை தான் எடுத்திருந்தது.
தோல்வியுடன் இந்த தொடரை தொடங்கி இருந்தாலும் மீதமுள்ள நான்கு போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்குவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது. இருந்தாலும் ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய வீரர்களால் இந்த முறை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது சில கேள்விகளை ஏற்படுத்தி தான் உள்ளது.
இந்த நிலையில் தோனியை போலவே அபிஷேக் ஷர்மாவும் தனது முதல் டி20 சர்வதேச போட்டியில் படைத்துள்ள மோசமான சாதனை ஒன்றை தற்போது பார்க்கலாம். இதற்கு முன்பாக தோனி, கே.எல் ராகுல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகிய இந்திய வீரர்கள், தங்களின் முதல் டி20 சர்வதேச போட்டியில் டக் அவுட்டாகி உள்ளனர். அவர்களை தொடர்ந்து தற்போது அபிஷேக் ஷர்மாவும் தனது முதல் போட்டியில் டக் அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.