வீடியோ: 59 ரன்னுக்கு ஆல் அவுட்….142 ரன் வித்தியாசத்தில் வெற்றி… ஆப்கானிஸ்தானை பொட்டலம் கட்டி சுருட்டிய பாக்…

- Advertisement -

6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கவுள்ளது. பாகிஸ்தானில் 9 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கவுள்ளன. இந்த ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான போட்டிகள் இலங்கை மண்ணில் நடப்பதால், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பின் பெரும்பாலான பாகிஸ்தான் வீரர்கள் அங்கேயே விளையாடி வருகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள், தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இலங்கை மண்ணில் நடப்பது தான் இதில் கூடுதல் சுவாரஸ்யம். இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி தரப்பில் களமிறங்கிய ஃபக்கர் சமான் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டானார். தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அரைசதம் விளாசி பாகிஸ்தான் அணியை காப்பாற்றினார். 94 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழக்க நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஷடாப் கான் 39 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 47.1 ஓவருக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 202 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களிலேயே விரட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டமே 20 ஓவர்களுக்குள் முடிந்து பாகிஸ்தான் பவுலர்கள் ட்விஸ்ட் வைத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஷட்ரான் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் ஷாகிடியும் நசிம் ஷா பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளாக இருந்தது.

இதன்பின் பந்துவீசிய ஹாரிஸ் ராஃப் விக்கெட்டுகளை வேட்டையாடி கொண்டிருந்தார். அவரும் தன் பங்கிற்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஃப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தோல்வியடையும் என்று பார்க்கப்பட்ட சூழலில், அந்த அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சு இந்திய ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்