இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டி, கிரிக்கெட் சரித்திரத்தில் மிக முக்கியமான போட்டியாகவும் மாறி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஜோடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் அவர்கள் மிக சிறப்பான ரன்னையும் எட்டி இருந்தனர்.
அதிலும் குறிப்பாக தொடக்க வீரர் பதும் நிஷாங்கா மிக முக்கியமான சாதனையை இலங்கை அணிக்காக செய்து சரித்திரம் படைத்துள்ளார். இதற்கு முன்பு வரை இலங்கை அணிக்காக தனி நபர் அதிகபட்ச ஸ்கோராக ஒரு நாள் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்கள் இருந்து வந்தது. ஆனால் அதனைக் கடந்த பதும் நிஷாங்கா இரட்டைச் சதம் அடித்ததுடன் மட்டுமில்லாமல், மொத்தம் 210 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெயரை பெற்றுள்ள பதும் நிஷாங்காவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர். மிகக் கடினமான இலக்கு என்பதால் இதனை நோக்கி அடிய ஆப்கானிஸ்தான் அணி எளிதில் தோற்றுவிடும் என்று தான் அனைவருமே கருதினர்.
ஆனால் சமீப காலமாக அனைத்து பெரிய அணிகளுக்கு எதிராகவும் மிக அற்புதமாக ஆடி வரும் ஆப்கானிஸ்தான அணி மீண்டும் ஒருமுறை சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தது. 55 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியை ஓமர் சாய் மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு மீட்டு எடுத்தனர். அதிலும் அவர்கள் ஆடிய ஆட்டம் ஒருவேளை அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுமோ என்ற அளவிற்கு இருந்ததுடன் இலங்கை அணியையே சற்று அச்சுறுத்தி இருந்தது.
ஓமர் சாய் 149 ரன்களும், முகமது நபி 136 ரன்களும் எடுத்த சூழலில், அந்த அணியால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களே எடுக்க முடிந்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் தோல்வியை தழுவினாலும் இப்படி ஒரு இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியை மீட்டெடுத்த நபி மற்றும் ஓமர்சாய் ஆகியோரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதிலும் 115 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 13 ஃபோர்களுடன் 149 ரன்கள் எடுத்த ஓமர்சாய், ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக இடம் பெற்றுள்ளதால் அவரது பேட்டிங்கை பார்க்கவும் இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.