ஆசியக் கோப்பை தொடரின் கடைசி குரூப் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களான கருணரத்னே – நிஷாங்கா முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். கருணரத்னே 32 ரன்களுலும், நிஷாங்கா 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த சமரவிக்ரமா 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்து கொண்டே இருந்தது. ஆனால் மறுமுனையில் குசால் மெண்டிஸ் சிறப்பாக அரைசதம் கடந்தார்.
4வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸ் – அசலங்கா இருவரும் சேர்ந்து 102 ரன்கள் சேர்த்தனர். பின்னர் அசலங்கா 36 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 92 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்புதீம் நைப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற 37.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான குர்பாஸ் 4 ரன்களிலும், ஜத்ரான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் குல்புதின் நைப் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ரஹ்மத் ஷா – கேப்டன் ஷாகிதி கூட்டணி அதிரடியில் களமிறங்கியது.
ரஹ்மத் ஷா 40 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க, கேப்டன் ஷாகிதி இன்னொரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் நின்றார். இதன்பின் களமிறங்கிய முகமது நபி தான் ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்தினார். அதிரடியாக ஆடிய நபி 32 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் சேர்த்தார். ஷாகிதியு 66 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 32 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற 31 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. அங்கிருந்து ரஷித் கான் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர், பவுண்டரி என்று விளாச, கடைசியாக 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரில் ரஷித் கான் 3 பவுண்டரிகளை விளாச, இறுதியாக 1 பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அப்போது களத்தில் இருந்த முஜீப் உர் ரஹ்மான் பவுண்டரி அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் 4 கனவும் பறிபோனது. பின்னர் வந்த ஃபஹல் ஃபரூக்கி டக் அவுட்டாக, 37.4 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.