தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜூன் 4-ம் தேதி மகேந்தா ராஜபக்க்ஷா இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்களை குவித்தது.
பின்னர் 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 42.1 ஓவரில் 191 ரன்கள் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் போது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மதீஷா பதிரானா இன்றைய இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே பதிரானா மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது அந்த போட்டியில் 8.5 ஓவர்களை வீசிய அவர் 66 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.
அதோடு 16 வொயிடு பந்துகளையும் வீசியிருந்தார். அதன் காரணமாக அனைவரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் பதிரானா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடாதது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இதையும் படிக்கலாமே: 18.5 கோடி வீனா போச்சு – இந்த சீசனோடு புஞ்சாப் அணியில சாம் கரன் கத முடிஞ்சது. அவர அந்த அணி இது தான் பண்ணுவாங்க பாருங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து
ஒரே ஒரு போட்டியில் ஏற்பட்ட சொதப்பலுக்கு பின்னர் அவரது அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலே அவர் கழட்டி விடப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இதுவே சி.எஸ்.கே அணியாக இருந்திருந்தால் நிச்சயம் அவரை அணி வெளியேற்றாமல் அவருக்கான வாய்ப்பை மீண்டும் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.