இந்திய அணியின் இளம் கேப்டன் மற்றும் வீரராக இருக்கும் சுப்மன் கில் பெற்ற ஒரு வெற்றியின் காரணமாக, தற்போது தோனிக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். டி20 உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் இருந்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் இந்த தொடரின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட இளம் வீரர்கள் பலருக்கும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து இருந்தாலும் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று தற்போது தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியில் ஐபிஎல் உள்ளிட்ட பல தொடர்கள் மூலம் நிறைய இளம் வீரர்கள் தயாராகி வருவதால் அவர்கள் இந்த தொடர்களிலும் வழக்கம் போல பட்டையை கிளப்பியிருந்தனர். பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் என அனைத்திலுமே எந்த குறையும் இல்லாமல் இந்திய வீரர்கள் அசத்த ஜிம்பாவே அணியால் அவர்களை எதிர்த்து வெற்றிகளை பெற முடியாமலும் போயிருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடி இருந்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக அடி எந்த விக்கெட்டும் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஜெய்ஸ்வால் 93 ரன்களும், கில் 58 ரன்களும் எடுக்க இந்திய அணி விக்கெட்டுகளை இழக்காமல் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த தொடரில் இதற்கு முன்பாக முதல் போட்டியில் சேசிங் செய்திருந்த இந்திய அணி, 115 ரன்கள் கூட எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நிகழாமல் தொடக்க வீரர்களே பார்த்துக் கொண்டதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அப்படி இருக்கையில் தான் முன்னாள் கேப்டனான தோனிக்கு பின்னர் சுப்மன் கில் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணி இதுவரை இரண்டு முறை தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தோனி தலைமையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது 2 வது முறையாக, இந்திய அணி அப்படி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் கேப்டன்களாக இருந்த சமயத்தில் அப்படி நடைபெறாத நிலையில், அவர்கள் இருவரின் தலைமையில் தான் தலா 1 போட்டியை இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.