தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தற்போது டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 4 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் எடுத்து அவுட்டான போதிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இருக்கும் எலைட் பட்டியலில் அவர் இணைந்துள்ளது தொடர்பான செய்தி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு காலத்தில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என எந்த வடிவை எடுத்துக் கொண்டாலும் விராட் கோலிக்கு நிகராக பல சாதனைகளையும் சர்வதேச அரங்கில் படைத்து வந்தவர் தான் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம். ஆனால் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை, 50 ரன்கள் கூட எந்த போட்டிகளிலும் தொட முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறார்.
சிறிய அணியாக இருந்தாலும், பெரிய அணியாக இருந்தாலும் பாபர் அசாமால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போக தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்தும் புறந்தள்ளப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஐசிசி தொடர்களில் பாபர் அசாமின் தலைமையில் பாகிஸ்தான் அணியால் வெற்றிகளை பெற முடியாமல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராகவும் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறி இருந்தது.
கோலி ஒரு கட்டத்தில் அதிக விமர்சனத்தை பேட்டிங்கில் சந்தித்து வருவது போல பாபர் அசாமும் தொடர்ந்து பேட்டிங்கில் சரிந்து போனதால் ஒரு சில போட்டிகளிலும் கூட அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.
பாகிஸ்தான் அணியில் கம்ரான் குலாம் மட்டும் 54 ரன்கள் எடுத்திருக்க, மற்ற எந்த வீரர்களும் 30 ரன்கள் கூட தொடவில்லை. அதிலும் இந்த முறையாவது நிதானமாக ஆடி 50 ரன்களை கடந்து விடுவார் என எதிர்பார்த்த பாபர் அசாம் வெறும் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக முக்கியமான ஒரு உயரத்தையும் அவர் பெற்றுள்ளார்.
நான்கு ரன்கள் சேர்த்ததன் காரணமாக டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களையும் பாபர் அசாம் தொட்டிருந்தார். இதன் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் 4,000 ரன்களை தற்போது பாபர் அசாம் கடந்துள்ளார். இவருக்கு முன்பாக சர்வதேச அரங்கிலேயே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர் மட்டும்தான் மூன்று வடிவிலும் தலா 4000 ரன்களை கடந்துள்ள வீரர்கள். அந்த வரிசையில் தற்போது பாபர் அசாமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.