TNPL தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் கோவை லைகா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கோவை லைகா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.
கோவை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சாய் சுதர்சன் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம். அணியின் கேப்டன் ஷாருக் கான் கடைசி நேரம் அதிரடியாக 8 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். நெல்லை அணியின் சார்பாக பொய்யாமொழி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் இறங்கிய நெல்லை அணி தொடக்க ஜோடி விரைவாகவே வீழ்ந்தாலும், மூன்றாவது வீரராக களமிறங்கிய அஜிதேஷ் குருசாமி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அஜிதேஷ் 60 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார்.
20 வயதாக அஜிதேஷின் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடக்கம். ஒரு கட்டத்தில் அவர் அவுட்டாகிவிட, கடைசி கட்டத்தில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட, அதையும் வெற்றிகரமாக கடந்து வெற்றியை ருசித்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.
கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் பொய்யாமொழி 2 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டை உதவினார். இதனால் ஒரு ஐபிஎல் பைனல் போன்ற விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது இந்த போட்டி. சதமடித்துக் கலக்கிய அஜிதேஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: வீடியோ: விறுவிறுப்புல ஐபிஎல்-லையே மிஞ்சிட்டாங்க. கடைசி 6 திக் திக் பந்துகள். அனல் பரந்த TNPL மேட்ச்
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அஜிதேஷ் குருசேமியின் குடும்பம் கர்நாடகாவுக்கு குடிபெயர்ந்தது. அங்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வந்த அஜிதேஷுக்கு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இலவசமாக சீட் கிடைக்க, அங்கிருந்து தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் வடிவமைத்து இப்போது டிஎன்பிஎல் தொடரில் இடம்பெற்று கலக்கி வருகிறார். விரைவில் ஐபிஎல், இந்திய அணி என அவரின் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.