இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட சமயத்தில் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதற்கு நிகராக தான் தற்போது மற்றொரு பயிற்சியாளர் இணைந்ததும் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல், தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக இந்திய அணியை பெரும்பாலும் முன்னாள் இந்திய வீரர்கள் தான் பயிற்சியாளராக இருந்து வழிநடத்தி வந்துள்ளனர். ஆனால் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் பயிற்சியாளராக இணைந்துள்ளதும் வெளிநாட்டு மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தெரிகிறது.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானதன் பின்னர் தனக்கு தேவைப்படும் முன்னாள் வீரர்களையும் பயிற்சியாளராக தேர்வு செய்திருந்தார். அந்த வரிசையில் அபிஷேக் நாயர், ரியான் டென்டஸ்கோத் உள்ளிட்டோர் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற இதனை தொடர்ந்து மோர்னே மோர்கலையும் கம்பீர் தேர்வு செய்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் இணைந்து ஆடியுள்ள சூழலில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்றும் கம்பீர் பலமுறை நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மோர்னே மோர்கலின் சர்வதேச அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் மோர்னே மோர்கல் செயல்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது இந்திய அணியிலும் இணைந்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் இருந்து அவர் தனது பணியை தொடங்குவார் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில் அவரது சகோதரரும், முன்னாள் தென்னாபிரிக்க வீரருமான ஆல்பி மோர்கல், மோர்னே மோர்கலின் பயிற்சி பதவி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பதை மிகப்பெரிய பொறுப்பாக தான் பார்க்கிறேன். அதே போல இந்திய அணியில் நிறைய சாதனைகளை செய்துள்ள தலைச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
இதனால் என் சகோதரர் மோர்னே மோர்கல் அவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பதுடன் மட்டுமில்லாமல் முழு திறணையும் அவர்கள் எட்டுவதற்கு உதவி செய்வார் என்றும் நம்புகிறேன். பும்ராவை பற்றி மோர்னே மோர்கல் என்ன நினைக்கிறார் என்பது பற்றி எனக்கு சரியாக தெரியாது.
ஆனால் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் உலக அரங்கில் நம்பர் ஒன் பவுலராக பும்ரா இருந்து வருகிறார். அவர் மிகவும் ஸ்பெஷலான வீரர் என்பதால் அவருடன் சேர்ந்து பணிபுரிவதை மோர்னே மோர்கல் நிச்சயம் விரும்புவார்” என ஆல்பி மோர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட் தற்போது பலம் பெற்றிருக்கும் நிலையில், நிச்சயம் மோர்னே மோர்கலின் வரவு மூலம் எதிரணியினருக்கு இன்னும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிகிறது.