குவாலிஃபைர் 2 போட்டிக்கு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தயாராகி விட்ட நிலையில் இன்னும் ஆர்சிபி அணி ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததை யாராலும் கடந்து போக முடியவில்லை. அந்த அளவுக்கு லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆட்டம் போட்டு வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணி, அப்படியே நேர்மாறான ஆட்டத்தை ராஜஸ்தானுக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தது.
பிளே ஆப் முன்னேறியதும் தோல்வியடைந்து வெளியில் செல்வதற்காகவா இந்த அளவுக்கு ஒரு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினீர்கள் என ஆர்சிபியை விமர்சிக்காத ஆட்களே கிடையாது. பிளே ஆப் முன்னேறுவதற்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடிவிட்டு தற்போது தோல்வியடைந்ததும் கூனி குறுகிப் போயினர் ஆர்சிபி அணியின் ரசிகர்கள்.
இத்தனை ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு ஆடிவரும் கோலி, ஒரு ஐபிஎல் கோப்பை கூட கைப்பற்றாமல் இருப்பது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவரும் அவரது ரசிகர்களும் செய்த சேட்டையை தான் ரசிகர்கள் அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய சமயத்தில் சிஎஸ்கே தோல்வி உறுதியானதும் வர்ணணையில் ஈடுபட்டிருந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராயுடு ஏறக்குறைய கண்கலங்கி போய்விட்டார். தொடர்ந்து ஆர்சிபியின் வெற்றியை பற்றிக் கூட அவர் பேசும்போது விமர்சனம் செய்த நிலையில் அந்த அளவுக்கு சிஎஸ்கேவின் ஆதரவாளராக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
இதனிடைய சென்னை அணியில் தற்போது ஆடிவரும் துஷார் தேஷ்பாண்டே, பெங்களூரின் தோல்வியை விமர்சித்து இன்ஸ்டாவில் பகிர்ந்த பகிர்வை பின்னர் நீக்கம் செய்திருந்தார். இந்த நிலையில் தான் அம்பத்தி ராயுடு, ஆர்சிபிஐ விமர்சிப்பது போன்ற பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை கைப்பற்றியதும் பேருந்தில் இருந்த ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட அனைவரும் ஐந்து, ஐந்து என ஐந்து முறை கோப்பையை வென்றதை ஜாலியாக பாட்டாக பாடி உற்சாகத்தில் இருந்தனர்.
இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்த அம்பத்தி ராயுடு, ஐந்து முறை சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றியதை நினைவூட்டுகிறோம் என ஆர்சிபி ரசிகர்கள் மற்றும் வீரர்களையும் மறைமுகமாக தாக்கி பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த பதிவின் கீழ் சிஎஸ்கே வீரர் பதிரானா மற்றும் தீபக் சஹர் என இருவருமே ஆர்சிபயை கலாய்க்கும் விதத்தில் எமோஜி கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.