ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018ஆம் ஆண்டு முதல் அம்பாதி ராயுடு விளையாடி வந்தார். அதன்பின் 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சுமார் 600 ரன்கள் குவித்து கோப்பையை சிஎஸ்கே வெல்ல காரணமாக அமைந்தார்.
இதையடுத்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் போது பேட்டிங் ஃபார்ம் சரிந்த போது, திடீரென ஓய்வை அறிவித்தார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், ஓய்வை திரும்ப பெற்றார். இதன் பின் 2023 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக ராயுடு அமைந்தார். இதன் காரணமாக கோப்பையை பெற்றுக் கொள்வதற்காக தோனி, ராயுடுவையும் உடன் அழைத்து சென்றார்.
இந்த சீசனுடன் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதாக அறிவித்தார். ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சில காலத்திற்கு பின்னரே வெளிநாட்டு லீக் தொடரில் விளையாடும் வகையில் பிசிசிஐ விதிமுறை கொண்டு வரப்போவதாக அறிவித்தது.
இதன் காரணமாக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆந்திர அரசியலில் அம்பாதி ராயுடு களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரை போலவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ராயுடு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎல் தொடரின் செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பிசிசிஐ தான் இறுதி முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஓய்வை அறிவித்த வீரர்களுக்கு பிசிசிஐ ஓராண்டு எந்த வீரருக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.
ஒருவேளை பிசிசிஐ அனுமதியளிக்கும் பட்சத்தில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார் ராயுடு. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பிரவீன் தாம்பே கரீபியன் லீக் தொடரில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது,