டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பேயாட்டம் ஆடியது என்றே சொல்லலாம். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த ஹைதராபாத் அணியின் சாதனையை உடைத்த பெருமையை பெற்றிருக்கும். ஆனால், கடைசி ஓவரை இஷாந்த் ஷர்மா சிறப்பாக வீசி இருந்ததால் 6 ரன்களில் அந்த வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டிருந்தார்கள்.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடந்த போட்டியில், மும்பை அணியை எதிர்த்து ஆடியிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 277 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு முன்பாக, பெங்களூரு அணி அடித்த 263 ரன்கள் தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை முறியடித்து சாதனை புரிந்திருந்தது ஹைதராபாத் அணி.
அப்படி ஒரு சூழலில், அடுத்த வாரத்திலேயே அதற்கான வாய்ப்பை நெருங்கி வந்திருந்தது ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவர்கள், ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர். கொல்கத்தாவின் ஆலோசகராக கம்பீர் வந்த பின்னர், தொடக்க வீரராக மீண்டும் களமிறங்கி வரும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார்.
அந்த அணியின் அதிரடி வீரர் ரசல் ஆடுவதை போல மரண அடியை சுனில் நரைன் ஆட, அவருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அறிமுக இளம் வீரர் ரகுவன்ஷியும் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் ரசல் மற்றும் ரிங்கு சிங் அதிரடி தொடர, 19 வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது.
கடைசி ஓவரில் 14 ரன்களை கொல்கத்தா எடுத்திருந்தால் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான ஹைதராபாத்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இந்த ஓவரை இஷாந்த் ஷர்மா சிறப்பாக வீசி எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
முன்னதாக பவர் பிளேவில் இஷாந்தின் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களுடன் 26 ரன்களை நரைன் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரை அப்படியே நேர்மாறாக வீசி பட்டையை கிளப்பி இருந்தார். அதிலும் 18 பந்துகளில் 41 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த ரசலை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே யார்க்கராக வீசி அட்டகாசமாக போல்ட் செய்திருந்தது அனைவரையும் மிரள வைத்திருந்தது.
ஒருவேளை ரசல் களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் 280 ரன்களை தொட்டிருக்கலாம். ஆனால் அதனை தடுத்திருந்த இஷாந்த் ஷர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் மிரட்டலான பந்துவீச்சில் அடிக்க முடியாமல் திணறி அங்கே விழுந்த ரசல், அவுட்டான மறுகணமே தனது கைகளை தட்டி தன்னை அவுட் செய்த இஷாந்த் சர்மாவின் பந்தை பாராட்டி விட்டு களத்திலிருந்து சென்றார். அவரது இந்த செயல், ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்துள்ளது.