சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்று இருந்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டியும் எதிரணியின் சொந்த மைதானத்தில் நிகழ்ந்திருந்தது.
அப்படி ஒரு சூழலில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே சந்தித்திருந்தது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க முழுக்க முழுக்க சென்னை அணியின் ரசிகர்களின் நிரம்பி வழிந்து இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி ஆடிய கொல்கத்தா அணி, பேட்டிங் வரிசையில் பலம் நிறைந்தே காணப்பட்டிருந்தாலும், அதனை தடுத்து நிறுத்தி அபாரமாக செயல்பட்டு இருந்தனர் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள். முதல் எட்டு பந்துகளிலேயே மூன்று விக்கெடுகளை எடுத்து பட்டையை கிளப்பியிருந்த ஜடேஜா, கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையையும் நிலைகுலையச் செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணியும் நிதானமாக ரன் சேர்த்தபடி இருந்தது. ருத்துராஜ் மிக நிதானமாக அரைச்சதம் கடந்திருந்த நிலையில் ஷிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ருத்துராஜ் 58 பந்துகளில் ஒன்பது ஃபோர்களுடன் 67 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 18 வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். சொந்த மைதானத்தில் தொடர்ந்து ராஜ்ஜியம் நடத்தி வரும் சிஎஸ்கே அணி, அடுத்த போட்டியில் மும்பை அணியை வான்கடே மைதானத்தில் சந்திக்கவுள்ளது. இதற்கிடையே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் வந்த போது ரசல் செய்த சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
சென்னையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளில் தோனி பேட்டிங் செய்யவில்லை. இதனிடையே மூன்றாவது போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களுக்காக கடைசி கட்டத்தில் களமிறங்கி இருந்த தோனி ஒரு ரன் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங்கை பார்க்கவே பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்கும் நிலையில் இந்தமுறை அவர் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் அடிக்கவில்லை என்றாலும், அவரது என்ட்ரியை ஆர்ப்பரித்து கொண்டாடி இருந்தனர்.
தோனி பேட்டிங் செய்ய உள்ளே நடந்து வந்தபோது ஒட்டுமொத்த மைதானமே நடுங்கி போக, ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ரசல், சத்தத்தை கேட்க முடியாமல் தனது காதை பொத்திக் கொண்டபடி நின்று கொண்டிருந்தார். தோனி என்ட்ரியால் எதிரணி வீரர்களே கதிகலங்கிய இந்த செயல் அமைந்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.