இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த தொடர் முழுவதுமே மழை அவ்வப்போது குறிக்கிட்டாலும் மைதான பராமரிப்பாளர்கள் மிகச் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக நிறைவடைய காரணமாக திகழ்ந்தனர். இதன் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 50,000 அமெரிக்க டாலரை பரிசாக மைதான பராமரிப்பாளர்களுக்கு வழங்கியது.
அதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருது மூலம் தனக்கு கிடைத்த 4000 அமெரிக்க டாலர்களையும் மைதான பராமரிப்பாளருக்காக வழங்கி அவர்கள் இல்லை என்றால் இந்த தொடரானது வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்காது. அவர்களின் உழைப்பிற்காக அதனை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இப்படி சிராஜ் மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சில் ஆகியோர் இணைந்து வழங்கிய இந்த வெகுமதியை பலரும் பாராட்டி இருந்தனர். ஆனால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான அர்ஜுனா ரணதுங்கா இந்த விவகாரம் குறித்து விமர்சனத்தை எழுப்பும் வகையில் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
இந்த விடயத்தில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்திய அணி இதற்கு முன்னதாக பலமுறை இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருக்கிறது. அப்போதெல்லாம் சில போட்டிகள் மழையால் நடைபெறாமல் போயிருக்கின்றன. அதேபோன்று சில போட்டிகள் மைதான பராமரிப்பாளர்களின் கடுமையான முயற்சிக்கு பிறகு வெற்றிகரமாக நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் மைதான பராமரிப்பாளர்களுக்கு இதுபோன்ற பரிசுத்தொகை பணமாக வழங்கப்பட்டது கிடையாது.
ஆனால் இம்முறை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பரிசுத் தொகையை அறிவித்ததோடு ஆட்டநாயகன் முகமது சிராஜும் பரிசு தொகையை வழங்கியது சரியாக படவில்லை. இத்தனை ஆண்டுகளாக மைதான பராமரிப்பாளர்கள் இந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரிய சார்பில் கூட இதுபோன்ற பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதில்லை. ஆனால் இப்படி திடீரென இவர்கள் பரிசுத்தொகையை வழங்கியது குறித்து மீடியா தான் விசாரிக்க வேண்டும் என அர்ஜுனா ரணதுங்கா பேசியுள்ளது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.