ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய போதும் அந்த அணியில் இடம்பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங், தனது பந்து வீச்சால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே தொடரின் கடைசி டி 20 போட்டியில், கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை வீசி இருந்த அர்ஷ்தீப் சிங், 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணி வெற்றி பெறவும் வழிவகுத்தார்.
அந்த போட்டிக்கு பின்னர் பேசி இருந்த அர்ஷ்தீப், எனது தோல்வியில் கற்ற பாடத்தினை வரும் போட்டிகளில் சரி செய்து நிச்சயம் மேம்படுத்துவேன் எனக்கூறி இருந்தார். அவர் சொன்னது போலவே, தெ. ஆ அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்தது இந்திய அணி.
இதற்கு பெரிய பங்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருடையது தான். பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கலாம் என முதலில் பேட்டிங் செய்த தெ. ஆ அணியை துவம்சம் செய்தனர் ஆவேஷ் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர். இருவருமே அசத்தலாக பந்து வீச தெ. ஆ அணி, வெறும் 116 ரன்களில் ஆல் அவுட்டானது. அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
இதன் பின்னர் மிகவும் எளிதாக இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஒரு நாள் போட்டியின் அறிமுக வீரர் சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். ஷ்ரேயஸ் ஐயரும் அரைசதமடிக்க, இந்திய அணி 17 வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஒரு நாள் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் நாயகனாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப் சிங் தேர்வாகி இருந்தார்.
ஆட்ட நாயகன் வென்ற பின் பேசிய அர்ஷ்தீப் சிங், “சில ஓவர்கள் பந்து வீசிய பிறகு மூச்சு விட சிரமப்பட்ட போது தான் பிட்ச்சில் இருந்த கடினத்தை அறிந்தேன். கடந்த ஆண்டில் இருந்து இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் சிறப்பாக பந்து வீசி தொடர்ந்து இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது கனவாக உள்ளது. என்னுடைய பணியை நான் மிகவும் விரும்பி செய்கிறேன்.
இதற்காக நான் நிச்சயம் கேப்டன் ராகுலுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். அவர் தான் என்னிடம் பலமாக கம்பேக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முயற்சி செய் என என்னை தேற்றினார். அடுத்த போட்டிகளில் பிட்ச்சை பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்” என அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.