ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற நல்ல ஃபார்மில் இந்தியா இருக்கிறது.
மறுபக்கம் பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. பேட்டிங், பவுலிங் என பாகிஸ்தானுக்கு நல்ல கோர் டீம் அமைந்துள்ளது. மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் இந்திய அணி பிளேயிங் 11 எப்படி தேர்வு செய்யபோகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்தியா – பாக். ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் பல முன்னணி வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், பாகிஸ்தானை தோற்கடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணியின் ஆட்டத்திறன் குறித்து அவர் பேசுகையில், வெள்ளை நிற பந்துகளில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். சமீபகாலமாக அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார்கள். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை, உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு சவால் தரும் வகையில் வலுவான அணியாக இருக்கும்.
1990ன் இறுதியிலும் 2000 தொடக்கத்திலும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிக ஸ்பெஷலாக இருக்கும். டேப் பால் மூலம் பாகிஸ்தான் அணி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கிவருகிறது. மேலும் பல பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக்கில் விளையாடுவதால் பாகிஸ்தான் அணி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது
தற்போது பாகிஸ்தானின் அணியின் பலமே ஸ்குவாடின் டெப்த் தான். அது அவர்களது வெற்றிக்கு முக்கிய அம்சமாக இருக்கும். பாகிஸ்தான் தற்போது அற்புதமான அணியாக இருப்பதால் அவர்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பாபர் அசாமும், ரிஸ்வானும் களத்தில் தொடர்ந்து நின்றால் போட்டி சவால் நிறைந்ததாக அமையும் என கூறினார். ஆசிய கோப்பைக்கு பின் அக்.14ம் தேதி உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.