தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வென்றது .இந்த நிலையில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த நான்காவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் முதல், பேட்டிங் செய்ய வந்த அனைவருமே மிகவும் சிறப்பாக ஆடினார்கள் என்றே கூற வேண்டும். துவக்க வீரரான குயின்டன் டி காக் 64 பந்துகளை 45 ரன்கள் விளாசினார். மற்றொரு துவக்க வீரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
ரஸ்ஸி வான் டெர் டுசென் 62 ரன்களும், கேப்டன் ஐடன் மார்க்ரம் எட்டு ரன்களும் எடுக்க, அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்கள் எடுத்து தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய ஒரு ஸ்கோரை சேர்த்தார். இதில் 13 போர்களும் 13 சிக்ஸர்களும் அடக்கம்.
ஹென்ரிச் கிளாசெனின் அதிரடி ஆட்டத்தின் விளைவாக 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை பொருத்தவரை ஜோஷ் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகளும், மார்கஸ் ஸ்டோனிஸ், மைக்கேல் நெசர், நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
அடுத்து பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் வெளியேறியதால் அந்த அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற தொடங்கியது. டேவிட் வார்னர் 12 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும், மிட்செல் மார்ஷ் ஆறு கண்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தனர்.
அலெக்ஸ் கேரிமட்டும் 77 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்திருந்தார். மற்றபடி வேறு எந்த வீரர்களும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததால் 34.5 ஓவர்களிலேயே அந்த அணி 10 விக்கட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நான்காவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 9 பேர் 20 ரன்களை கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழாவது முறையாக 400 ரன்கள் கடந்ததன் மூலம் அதிக முறை 400 ரன்கள் கடந்த அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் ஜம்பா 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 113 ரன்களை கொடுத்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துளளார்.