உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பவுமா – டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதி பவுமா டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, டி காக் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த மார்க்ரம் 10 ரன்களிலும், வான் டர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த மில்லர் – கிளாஸன் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டெய்லண்டர்களுடன் இணைந்து டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய மில்லர் சதம் விளாசி 101 ரன்களில் ஆட்டமிழக்க, 49.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பொல் மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட் இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் – ஹெட் கூட்டணி வந்தது.
இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை விளாசினர். அப்போது மார்க்ரம் வீசிய பந்தில் வார்னர் 29 ரன்களில் போல்டாகி ஆட்டமிழக்க, பின்னர் வந்த மிட்சல் மார்ஷ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நின்ற டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 100 ரன்களை கடந்தது.
இந்த சூழலில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 62 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஸ்மித் – லபுஷேன் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். இதனால் ஆட்டம் ஆஸ்திரேலிய அணி பக்கம் திரும்பியது. ஆனால் ஷன்ஸி வீசிய பந்தில் லபுஷேன் 18 ரன்காளிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களிலும், இங்கிலிஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கம்மின்ஸ் – ஸ்டார்க் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். இடைஇடையே இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தென்னாப்பிரிக்கா ஃபீல்டர்கள் தவறவிட்டனர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 31 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.