உலகக் கோப்பை 2023 வருகிற அக்.05ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபாரம் வெற்றிபெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.
ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்ற நிலையில் 3-0 என்ற கணக்கில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற தீவிரமாக விளையாடியது. மறுபக்கம் இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவே வேண்டும் என ஆஸ்திரேலிய அணி தனது முழு பலத்தையும் காட்டியது. இந்த போட்டி ரசிகர்களுக்கு இடையே அதீத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்யப்போவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டேவிட் வர்னர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்து 32 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷுடன் கை கோர்த்தார். இருவரும் தங்களது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். தொடர்ந்து, இருவருமே அரை சதம் அடித்தனர்.
அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 96 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். மிட்செல் மார்ஷை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தும் அவுட் ஆனார். இவர், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து 74 ரன்களை குவித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதற்கிடையே நிதாணமாக ஆடிய மார்னஸ் லபுஷாக்னே அரை சதம் அடித்தார். பின்னர், அவரும் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 352 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
தொடர்ந்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்குவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரோஹித் சர்மாவும் வாஹிங்டன் சுந்தரும் களம் இறங்கினர். தொடர்ந்து இருவரும் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ரோகித் சர்மா தனது வழக்கான பானியில் ஒவ்வொரு ஓவர்களிலும் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து ரண்களை குவித்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. ஆனால் வாஹிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். 31 பந்துகளில் 50 ரன்களை அடித்து ரோகித் தனது அரை சதத்தை உறுதிபடுத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அடித்த 52ஆவது அரை சதமாகும்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திவந்த நிலையில் 56 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து வந்த கே.எல்.ராகுல் 18 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். தொடர்ந்து களம் இறங்கிய குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க நிதாணமாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி, 49.4 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மேக்ஸ்வேல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் (2-0) வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை கடைசி ஆட்டத்தில் தோற்கடித்து வைட்வாஷ் செய்யும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.