உலகக் கோப்பை 2023ஆம் ஆண்டிற்கான போட்டி அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும் அணியின் ஊழியர்களுக்கும் இந்தியா செல்ல விசா வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாளை (செப்.27) துபாய் மார்க்கமாக இந்தியாவில் உள்ள ஹைதராபாத்திற்கு வர உள்ளனர்.
இந்நிலையில் இன்று உலகக்கோப்பை குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், ” இந்த உலக கோப்பை தொடரில் டாப் 4 சுற்றில் வருவது எங்களது நோக்கம் கிடையாது. டாப் 4 சுற்று என்பது எங்களுக்கு ஒரு சிறிய விஷயம். ஆனால், இந்தியா வந்து உலக கோப்பையை தட்டிச் செல்வதுதான் எங்களுடைய லட்சியம்.
இந்த உலக கோப்பை தொடருக்காக நாங்கள் நீண்ட நாட்களாகவே தயாராகி வருகிறோம். இப்போதுள்ள எங்களது பாகிஸ்தான் அணி சிறப்பாக, வெற்றியின் தேடலில் உள்ளது. உலக கோப்பை போட்டிக்காக இந்தியா செல்வதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அதே சமயம் ஒரு கேப்டனாக எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை கட்டாயம் உலக கோப்பையுடன் திரும்புவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நாங்கள் பலமுறை இந்தியாவில் விளையாடி உள்ளோம். எந்த மைதானமாக இருந்தாலும் சரி எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே நாங்கள் நினைக்கிறோம். எப்போதெல்லாம் ஒரு சுற்றுப்பயணம் வருகிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய அணிகளுக்கு ஏற்ப நான் என்னை தயார் செய்து, எனக்கான இலக்குகளை நிர்ணயிப்பேன். அதன் பிறகு எனது 100% எப்பர்ட்டை ஆட்டத்தின் போது கொடுப்பேன்.
நாங்கள் பீல்டிங்கிலும், மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பதிலும் கோட்டை விடுகிறோம். ஆனால் அந்த தவறுகளை சரி செய்ய நாங்கள் உழைத்துவருகிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் அது போன்ற தவறுகள் நடக்காது என நம்புகிறோம். அதற்கான பிளான் எங்களிடம் உள்ளது.
ஸ்பின்னர்கள் ஷாதாப் மற்றும் நவாஸ் ஆகியோர் மீது நிறைய விமர்சனங்கள் உள்ளன. அவர்கள் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சாதாரண வீரர்கள் அல்ல. பாகிஸ்தான் அணிக்கான முக்கிய வீரர்கள். அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நசீம் ஷாவை இல்லாதது எங்களுக்கு இழப்பு தான். அவரும் ஷாஹீன் அப்ரிடியும் சேர்ந்து பந்து வீசும் பொது அவர் கூடுத பலமாக இருக்கும். அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வது கடினம் தன். ஆனால் நாங்கள் கலந்தாலோசித்து எங்கள் சீப் செலெக்டர் இன்சமாமின் கருத்துக்களை பெற்று ஹசன் அலியை நாங்கள் அணியில் இடம்பெற செய்துள்ளோம்.
புதிய பந்தை யார் வீசப்போகிறார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதை சொல்வதன் மூலம் எங்களுடைய ஸ்ட்ராடர்ஜியை சொல்வது போல ஆகிவிடும் என்று கூறி உள்ளார் பாபர் அசாம்.