2016ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியை தொடர்ச்சியாக இரு போட்டிகளில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே காரணமாக விமர்சிக்கப்படுகிறது. டாஸ் முதல் சாஹலை பயன்படுத்த தவறியது வரை ஹர்திக் பாண்டியா ஏராளமான மோசமான முடிவுகளை எடுத்துள்ளார்.
அதேபோல் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோரின் மோசமான ஃபார்மும் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக்கு அருகில் இருந்த போதும், இந்திய அணி தோல்வியடைந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களை காரணம் காட்டி ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
தோல்வி பற்றி இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும் போது, எங்கள் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பார்க்கையில் சந்தோசத்தை அளிக்கவில்லை. இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம். இந்த பிட்சை பொறுத்தவரை 160 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பூரனின் அதிரடியான ஆட்டத்தால் 3 ஸ்பின்னர்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
எங்களை அவர் சிக்கலுக்குள் தள்ளினார் என்றே சொல்லலாம். 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போது, எங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்து சென்றுவிட்டார். இந்திய அணி டாப் 7 பேட்ஸ்மேன்களும் நிச்சயம் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் மீளும் பட்சத்தில், பவுலர்கள் வெற்றியை தேடி கொடுப்பார்கள். அதேபோல் 8,9,10 ஆகிய வரிசையில் பௌலர்கள் களம் இறங்கும்போது அவர்களும் சில ரன்களை குவிப்பதற்கான ஒரு தீர்வை நாங்கள் கண்டறிய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி விளையாடினால் தான் வெற்றியை பெற முடியும். ஒரு இடதுகை பேட்ஸ்மேன் 4வது இடத்தில் களமிறங்குவது எந்தவொரு அணிக்கும் ஏராளமான சாதகங்களை அளிக்கும். அதேபோல் திலக் வர்மா ஆடிய ஆட்டத்தை பார்க்கும் போது, அவர் 2வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதை போல் இல்லை.
அவர் அனுபவம் வாய்ந்த வீரரை போல் களத்தில் பேட்டிங் செய்துள்ளார். இந்த காலகட்டம் எங்களுக்கு கற்றுக் கொள்ள வேண்டிய சூழலாக இருக்கிறது. நிச்சயம் அடுத்தடுத்து போட்டிகளில் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.