இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. சுமார் 1.40 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து மைதானத்திலேயே போட்டியை பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இரு அணிகள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளிலும் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், யாருக்கு வெற்றி என்பது ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
அகமதாபாத் பிட்சை பொறுத்தவரை முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பெரிய இலக்கை சேஸிங் செய்து இதுவரை பெரியளவில் எந்த அணியும் வென்றதில்லை. ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும்.
அதுபோல் உலகக்கோப்பை இறுதி சுற்றிலும் அகமதாபாத் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கும் கருப்பு மண் கொண்ட பிட்ச் தான் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடிய போட்டிக்கு தயாரிக்கப்பட்ட பிட்ச் போல் தான் இந்த போட்டிக்கும் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் முதல் பேட்டிங் செய்யும் அணி பெரிய இலக்கை நிர்ணயம் செய்தால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியால் சேஸிங் செய்வது கடினமான ஒன்றாக அமையும். ஏனென்றால் போட்டியின் நடுவே ஹெவி ரோலர் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
அதேபோல் முதல் பேட்டிங் ஆடும் அணி குறைந்தபட்சம் 315 ரன்களையாவது எடுத்தால் மட்டுமே, டிஃபெண்ட் செய்ய முடியும். பெரிய இலக்கை நிர்ணயம் செய்தாலே, இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி சரிந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்படுகிறது.