இந்திய அணி டி20 உலக கோப்பையை சமீபத்தில் வென்றதை போல இனிவரும் ஐசிசி தொடர்களில் நிச்சயம் தங்கள் மீது விமர்சனத்தை உருவாக்காமல் அடுத்தடுத்து கோப்பைகளை கைப்பற்றுவார்கள் என்ற சிறிய நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி மூன்று ஐசிசி கோப்பைகளை 6 ஆண்டுகள் இடைவெளியில் வெல்ல காரணமாக இருந்தவர் தான் கேப்டன் தோனி.
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது தலைமையிலேயே சில ஐசிசி தொடர்களை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை தடுமாறித்தான் வந்தது. டி20 உலக கோப்பையில் சிறந்த வீரர்களை இந்திய அணி தேர்வு செய்திருந்ததால் இந்த முறை நிச்சயம் உலகக் கோப்பை மிஸ் ஆகாது என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனை ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி பூர்த்தி செய்ய பல ஆண்டுகள் எட்டாக்கனியாக இருந்த விஷயம் தற்போது கனவு நிஜமான தருணம் ஆகவும் மாறி உள்ளது. இந்திய அணி கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி உலக கோப்பையை வென்றாலும் அதனை இன்னும் பல இடங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
ஒட்டு மொத்த இந்தியாவே இதனை மிகப்பெரிய ஒரு சாதனையாக கருதி கொண்டாட இந்த உற்சாகம் முடிவடைவதற்கு இன்னும் பல நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று தான் தெரிகிறது. அப்படி இருக்கையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதற்காக பிசிசிஐ தரப்பில் 125 கோடி ருபாய் பரிசு தொகையாக ஜெய் ஷா அறிவித்திருந்தார்.
மற்ற எந்த கிரிக்கெட் நிர்வாகமும் இப்படி ஒரு பரிசுத் தொகையை கொடுக்குமா என்பதே பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில் பிசிசிஐ செய்த இந்த பாராட்டு பலரையும் நெகிழ வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில், இந்த 125 கோடி ரூபாய் எப்படி அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும் என்பதை தற்போது பார்க்கலாம்.
15 இந்திய வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என மொத்தம் 16 பேருக்கு தலா 5 கோடி ரூபாய் என பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இது தவிர, பயிற்சியாளர் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாயும், பிற ஊழியர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, தேர்வுக் குழு கமிட்டியில் இருந்தவர்களுக்கு தலா 1 கோடி ரூபாயும், ரிசர்வ்டு வீரர்கள் 4 பேருக்கு தலா 1 கோடி ரூபாயும் கொடுக்கப்பட உள்ளது. இது போன்ற பரிசுத் தொகை கொடுப்பது என்பது நிச்சயம் வரவிருக்கும் பெரிய தொடர்களிலும் இந்திய அணி சாதிப்பதற்கு உந்து கோலாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.