இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது லீக் போட்டிகளை நிறைவு செய்து அடுத்ததாக பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர இருக்கிறது. இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகளாக எந்த நான்கு அணிகள் தேர்வாகும் என்பதே கடந்த சில நாட்களாக அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதலிடம் பிடித்த குஜராத் அணி மட்டும் தங்களது இடத்தினை உறுதி செய்திருந்த வேளையில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணிகளாக புள்ளிபட்டியலில் (17 புள்ளிகள்) பெற்று பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்தது.
அதனை தொடர்ந்து நான்காவது இடத்தை பிடிக்கப்போகும் அணி எது என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சிஎஸ்கே இரண்டாம் இடம் பிடித்து முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற முடிந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி நாடு திரும்புகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பென் ஸ்டோக்சும் “தேசிய கடமைக்காக சென்னை அணியில் இருந்து விலகுவதாகவும்” அடுத்த ஆண்டு சந்திப்பதாகவும் ஒரு குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரது இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக : உங்களை எல்லாம் 16.25 கோடிக்கு எதற்காக எடுத்தார்கள்? என்று தெரியவில்லை. விளையாடியது இரண்டே போட்டிகள் அதில் அடித்தது வெறும் 15 ரன்கள். எதற்காக உங்களை சிஎஸ்கே அணி வாங்கியது என்று புரியவில்லை அடுத்த வருடமாவது உங்களை நீக்கி வேறு ஒரு நல்ல வீரரை சென்னை அணி வாங்க வேண்டும் என கிண்டலாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.