ஆசிய கோப்பை தொடரில் நாளை நேபாளம் அணியுடன் இந்தியா மோதவுள்ள நிலையில், தற்போது இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா நாடு திரும்பியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் ஷர்மா, கோலி, ஜடேஜா எந்த அளவுக்கு முக்கிய வீரர்களோ அந்த அளவுக்கு ஜஸ்ப்ரித் பும்ராவும் மிக முக்கியமான வீரர். இந்திய பந்துவீச்சு கூட்டணியை அவர்தான் வழிநடத்துகிறார். கடந்தாண்டு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா டி20 உலக கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை.
தற்போது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு அவரது பணிச்சுமையை பிசிசிஐ தீவிரமாக கண்காணித்தது. காயத்திலிருந்து மீண்ட பின் அவர் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணிக்கு கம்பேக் தந்தார்.
இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது ஃபார்மை தக்க வைத்தார். இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரிலும் அவர் இடம்பிடித்தார். பந்துவீச்சில் மட்டுமல்ல சில சமயங்களில் பேட்டிங்கிலும் பும்ரா அசத்துவதுண்டு. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா (87), இஷான் கிஷனுக்கு (82) அடுத்து மூன்றாவது அதிக ஸ்கோர் (16) அடித்தது பும்ரா தான். அதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஏற்கனேவே நேபாளத்துடன் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதால் 3 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா – நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை கன்டியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் தற்போது பும்ரா சொந்த காரணங்களுக்காக திடீரென அவர் மும்பை திரும்பியுள்ளார்.
இதனால் நாளைய போட்டியில் அவர் விளையாடமாட்டார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் அவர் சூப்பர் 4 சுற்றின்போது இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என கூறப்படுகிறது. பும்ரா இல்லாததால் நாளைய போட்டியில் முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என தெரிகிறது.
எனவே முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என மூன்று பந்துவீச்சாளர், குல்தீப் யாதவ், ஜடேஜா என 2 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.