அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்று பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து டப்ளின் நகரில் நேற்று ஆகஸ்ட் 20-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் குவித்தனர். அவர்கள் இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்த வேளையில் கடைசி கட்டத்தில் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிக்ஸர்களை பறக்கவிட்டு கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் ரன் ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார். குறிப்பாக ரிங்கு சிங் 21 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 38 ரன்களையும், ஷிவம் துபே 16 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 22 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டிய ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ரிங்கு சிங் கூறுகையில் :
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. ஐபிஎல் தொடரில் நான் என்ன செய்தேனோ அதையே இங்கும் செய்ய முயற்சித்தேன். கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இப்படி முதல் போட்டியிலேயே எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என ரிங்கு சிங் கூறினார். மேலும் இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
மைதானம் ட்ரையாக இருந்ததால் பந்து மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். அதே போன்று முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்ததும் எங்களுக்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் எல்லோருமே வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். மேலும் நாட்டுக்காக ஆட வேண்டும் என்று கடினமான முயற்சிகளை மேற்கொண்டு இங்கு நிற்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ஒரு ஒருவிதமான ஆரோக்கியமான தலைவலி ஏற்பட்டுள்ளதாக பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.