இந்த ஆண்டு ஒரு கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா சந்தித்தது போல துயரங்களை நிச்சயம் எந்த வீரர்களும் சந்தித்திருக்க மாட்டார்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரோஹித் ரசிகர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இது தவிர பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கூட ஹர்திக் பாண்டியாவின் பக்கம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே அதிரடி வீரர்கள் இருந்தும் பல குழப்பங்களுக்கு மத்தியில், ஐபிஎல் தொடரிலும் கடைசி இடம் பிடித்து வெளியேறி இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதற்கிடையே ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் விவாகரத்து செய்ய போவதாகவும் ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே தகவல்கள் வெளியாகி ஹர்திக் பாண்டியா நிலையை இன்னும் மோசமாக மாற்றி இருந்தது. உலகக் கோப்பைத் தொடரும் நெருங்கி வந்த நேரத்தில் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி எப்படி ஹர்திக் பாண்டியா தன்னை நிரூபிப்பார் என்று கேள்வியும் எழுந்திருந்தது.
ஆனால் உலகக் கோப்பை தொடரில் அத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் களமிறங்கி இருந்த ஹர்திக் பாண்டியா, மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் திறனை வெளிப்படுத்தி இந்திய அணி இறுதி போட்டியில் கோப்பையை கைப்பற்றவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
எந்த மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக குரல்கள் எழுப்பினார்களோ அதே மைதானத்தில் அவருக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது. இதனால் ரோஹித், பும்ரா, சூர்யகுமார் ஆகியோருக்கு ஹர்திக் பாண்டியாவுடன் விரிசல் இருந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பதும் ஏறக்குறைய உறுதியாகி இருந்தது.
இதனிடையே மும்பை அணிக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்ததா என்பது பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “நாங்கள் ஒரு அணியாக நிச்சயம் ஒரு வீரரை தனியாக விட முடியாது. அனைத்து தருணத்திலும் ஹர்திக்குடன் நின்று உதவி செய்தோம்.
அணிகளில் இருந்து நாங்கள் அனைவரும் அவருக்கு தேவைப்படும் நேரத்தில் உதவிகளை தான் செய்து கொண்டிருந்தோம். ஒரு அணியாக நாங்கள் அவருடன் இருந்ததுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே தான் இருந்தோம். அவரது குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் சில விஷயங்கள் நாம் கட்டுப்பாடில் இல்லாமல் போகும்போது நிச்சயம் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால் அந்த அனைத்து விஷயங்களையும் இந்த உலகக் கோப்பை தொடரை நாங்கள் வென்றதால் மாறிப் போய் விட்டது” என பும்ரா கூறியுள்ளார்.