இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. தோனியின் கேப்டன்சியில் அறிமுகமான பும்ரா விராட் கோலியின் கேப்டன்சியில் உச்சம் பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் பார்த்தால் பும்ராவின் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வெறும் விக்கெட் வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், வெற்றியை நோக்கமாக கொண்டு மற்ற வீரர்களையும் தட்டிக் கொடுத்து விளையாடுபவர் பும்ரா.
அதேபோல் ஆடுகளத்தை கணிப்பது, எதிரணிக்கு எதிராக வியூகம் வகுப்பது, சக பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்று பும்ரா அடுத்த கேப்டன் நிலைக்கும் உயர்ந்துள்ளார். ரோகித் சர்மா இல்லையென்றால் பும்ராவே இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வீரராக இருக்கிறார். கடந்த 10 மாதங்களாக காயத்தால் சிரமங்களை சந்தித்த பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார்.
அதன்பின் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய 16 ரன்கள் சேர்த்தார். பின்னர் பந்துவீச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால், ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் திடீரென இலங்கையில் இருந்து சொந்த காரணங்களுக்காக மும்பை புறப்பட்டார் பும்ரா. இதனால் மீண்டும் காயமடைந்தாரா என்ற ரசிகர்கள் சோகமடைந்தனர்.
ஆனால் தனது முதல் குழந்தையை வரவேற்பதற்காக பும்ரா மும்பை சென்றதாக தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். டிவி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட பும்ரா, தமிழ்நாட்டின் மருமகனானார். நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வந்த நிலையில், சஞ்சனா கணேசன் கடந்தாண்டு இறுதியில் கர்ப்பமானார்.
இந்த நிலையில் இன்று காலை பும்ரா – சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ட்விட்டரில் பும்ரா, எங்களின் சிறிய குடும்பத்தில் புதிதாக ஒருவர் வந்துருக்கிறார். அவரின் வரவால் நாங்கள் கற்பனை செய்திடாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இன்று காலை எங்களின் மகன், ”அங்கத்” ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றுள்ளோம் என்று அறிவித்துள்ளார். அங்கத் என்றால் போர்வீரன் என்ற அர்த்தம். சீக்கிய பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பும்ரா, தனது மகனுக்கு சீக்கிய பெயரை சூட்டியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.