கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய பும்ரா தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த அவர் இரண்டு போட்டியில் விளையாடிய நிலையில் மீண்டும் காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இலங்கையை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அணியில் இணைந்த அவர் பின்னர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது காயம் முழுமையாக குணம் அடைந்த பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக தனது உடற்தகுதி குறித்தும் தனது கம்பேக் குறித்தும் பும்ரா சில தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் பும்ரா கூறியதாவது : எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்னுடைய உடற்தகுதிக்காக நிறையவே உழைத்திருக்கிறேன். இந்த பயணம் நீண்ட தூரம் என்றாலும் காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி.
எதிர்வரும் இந்த தொடரில் விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என்னுடைய பிட்னஸ் குறித்த சந்தேகங்கள் அனைத்திற்கும் இந்த தொடரின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். உங்கள் கையில் இல்லாத சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் உங்களது உடலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். காயத்திலிருந்து மீண்டு வர போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும். அப்படி சரியான நேரத்தை கொடுத்தால் மட்டுமே முழுமையாக நாம் காயத்திலிருந்து வெளியே வர முடியும்.
தேசிய கிரிக்கெட் அகாடமி மட்டுமின்றி குஜராத் அணியுடனும் காயத்துக்கு பின்னர் பயிற்சியினை மேற்கொண்டு இருந்தேன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பி உள்ளதால் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த காத்திருக்கிறேன் என்று பும்ரா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தொடர்ச்சியாக உங்களுக்கு காயம் ஏற்படும் போது அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். நான் என்னுடைய உடற்தகுதி குறித்து சந்தேகப்பட்டிருந்தால் என்னால் அதிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது.
நான் என்னுடைய முழு உடற்தகுதியை எட்ட அதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அந்த வகையில் தற்போது சரியான ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு என்னுடைய கடினமான காலத்தை கடந்து வந்துள்ளேன் என்று கூறினார். பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட இழப்பு என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கூறியிருந்தனர். இந்த விவகாரத்துக்கு பதிலளித்த பும்ரா கூறுகையில் : நான் அவர்களது கருத்தை மதிக்கிறேன். ஆனால் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
ஏனெனில் அவர்களது எதிர்பார்ப்பு காரணமாக நானே என் மீது அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ஆட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். என்மீது அதிக எதிர்பார்ப்பு யாரும் வைக்க வேண்டாம். நான் என்னுடைய பந்துவீச்சை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தவும் அதனை இந்திய அணியின் வெற்றிக்காகவும் செய்யவும் நினைக்கிறேன். என் மீது எதிர்பார்ப்பு இருந்தால் அது என்னுடைய பிரச்சனை கிடையாது. அது அவர்களுடைய பிரச்சனைதான் என ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு பும்ரா பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.