இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. லீக் சுற்றுகள் முடிவில் 2-ஆம் இடம் பிடித்த சி.எஸ்.கே அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
அப்படி இறுதிப்போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது மீண்டும் இறுதிப்போட்டியில் அதே குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்படி இந்த சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாடும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.
இப்படி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இப்படி இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் தீடீரென வெளியேற காரணம் யாதெனில் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 7-11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வேளையில் ஜூன் 3-4 ஆகிய தேதிகளில் ருதுராஜ் திருமணம் செய்ய இருப்பதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்யப்போகும் அந்த பெண் யார்? என்பதே அனைவரது தேடலாகவும் இருக்கிறது.
அதன்படி ருதுராஜ் திருமணம் செய்யப்போகும் அந்த பெண்ணின் பெயர் : உட்கர்ஷா பவார். 1998 ஆம் ஆண்டு பிறந்த அவரும் ஒரு கிரிக்கெட்டர் தான். ஆம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆண்கள் அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவது போன்று அவரது வருங்கால மனைவி உட்கர்ஷா பவார் பெண்கள் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ஐபிஎல் முடிந்த கையோடு மருத்துவமனையில் அட்மிட் ஆக உள்ளாரா தோனி? இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?
24 வயதாகும் இவர், 10 போட்டிகள் விளையாடி அதில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதே போல இவருடைய பேட்டிங் ஆவரேஜ் 20.5 ஆக உள்ளது. இவர் 11 வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது இவர் புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் நியூட்ரிஷன் அண்ட் பிட்னெஸ் சயின்சஸ் என்ற படிப்பை படித்து வருவது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால நண்பர்களாக இருந்து வரும் ருதுராஜும் இவரும் இன்னும் சில தினங்களில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.