ஒட்டுமொத்த ரசிகர்களும் உச்சகட்ட வெயிட்டிங்கில் இருந்த முக்கியமான ஐபிஎல் போட்டி நடந்து முடிந்து விட்டது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த மும்பை அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆறாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்தித்திருந்தது. மறுபுறம் சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் மட்டும் வெற்றிகளை குவித்து வரும் சூழலில், மும்பையின் கோட்டையான வான்கடேவில் அவர்களை எதிர்த்து ஆடி இருந்தனர்.
இந்த இரண்டு அணிகளின் மோதும் போட்டிக்கான நாளை எண்ணி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தான், அதன் முடிவும் தற்போது கிடைத்து விட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 206 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ருத்துராஜ் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்திருந்த நிலையில், கடைசியில் நான்கு பந்துகள் களமிறங்கி இருந்த தோனி, அதில் மூன்று சிக்ஸர்களுடன் 20 ரன்கள் அடித்து வான்கடே மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்திருந்தார்.
வழக்கம்போல மிட்செல் இந்த முறையும் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகி இருந்த நிலையில் அவரது பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இனி வரும் போட்டிகளில் மிட்செலுக்கு பதிலாக மொயீன் அலிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதும் தற்போது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதனை தொடர்ந்து 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, ஏழு ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 70 ரன்களை தொட்ட சமயத்தில் தான் எட்டாவது ஓவரில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பதிரானா வீசிய இந்த ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷான் அவுட்டாக, மூன்றாவது பந்தில் சூர்யகுமார் டக் அவுட்டானார்.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியை போல குறைந்த ஓவர்களில் போட்டியை முடிக்கும் பொருட்டு ஆடிக் கொண்டிருந்த மும்பை அணி, சூர்யகுமார் அவுட்டிற்கு பின் சற்று நிதானமாக தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை அடித்தும் ஆடி இருந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்துக் கொண்டிருந்த நிலையில், திலக் வர்மாவும் அவருடன் சேர்ந்து கிடைக்கும் கேப்களில் போர்களை அடித்து 31 ரன்களுடன் அவுட்டாகி இருந்தார்.
இதன் பின்னர் ஐந்து ஓவர்களில் 75 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து வந்த டிம் டேவிட், இரண்டு சிக்ஸர்களை அடித்து விட்டு கிளம்ப, ரோமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னில் அவுட்டானார். சிஎஸ்கே அணியில் பதிரானா நான்கு முக்கிய விக்கெட்டுகளை 3 ஓவரில் வீழ்த்த, கடைசி 2 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 47 ரன்கள் வேண்டுமென்ற சூழல் உருவானது.
19 வது ஓவரை வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான் 13 ரன்கள் மட்டுமே கொடுக்க, கடைசி ஓவரில் பதிரானா 13 ரன்கள் கொடுத்திருந்தார். இதனால், சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், சேப்பாக்கத்தை தாண்டி எதிரணியினர் மைதானத்தில் சிஎஸ்கே இந்த தொடரில் வென்ற முதல் போட்டி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை வெற்றிக்காக போராடிய ரோஹித் ஷர்மா, சதமடித்தும் அது வீணாய் போயிருந்தது.