ஐபிஎல் தொடரின் தலைச்சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி தலைமையில் இயங்கி வரும் சிஎஸ்கே இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி உள்ளது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வென்றிருந்தது. இதனால் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே நிச்சயம் மற்றொரு தடம் பதிக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
பொதுவாக முப்பது வயதிற்கும் மேற்பட்ட வீரர்களை தங்களின் அணியில் சேர்த்து அவர்கள் அனுபவத்தைக் கொண்டு வெற்றி பெறுவதை சிஎஸ்கே வழக்கமாகக் கொண்டு வருகிறது. அதனால் இந்த முறை ஏலத்தில் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் ஏலத்தில், சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், முஸ்தாபிஷுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்து தங்கள் அணியை இன்னும் பலப்படுத்தி உள்ளது.
எப்போதுமே சீனியர் வீரர்களை ஏலத்தில் எடுக்க பார்க்கும் சிஎஸ்கே அணி, இந்த முறை உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆகும் சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நிச்சயமாக அவரை சிஎஸ்கே அணி சிறப்பாக பயன்படுத்தும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிஷுர் ரஹ்மானுக்கும், தோனிக்கும் சிறிய மோதல் நடந்தது தொடர்பான பழைய வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி இருந்த தொடரில் தான் முஸ்தாபிஷுர் ரஹ்மான் அறிமுகமாகி இருந்தார். அப்போது போட்டிக்கு நடுவே, ரஹ்மான் வீசிய பந்தை அடித்து விட்டு தோனி சிங்கள் ஓட முயன்றார். அப்போது அவர் ஓடும் வழியில் ரஹ்மான் அவரை மறைத்து நிற்க, சிறிதாக கையைக் கொண்டு அவரை தள்ளிவிட்டு ரன் ஓடினார் தோனி. இதனால் நிலைத்தடுமாறிய முஸ்தாபிஷுர் ரஹ்மான், பின்னர் சுதாகரித்துக் கொண்டு சரியானார்.
தோனி தள்ளி விடுவதற்கு முன்பாக மற்றொரு இந்திய வீரருடன் இது போல முஸ்தாபிஷுர் நடந்து கொண்டதாக தெரிகிறது. அதனால் தான் தோனி வேண்டுமென்றே அவர் மீது மோதினார் என்றும் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. சிஎஸ்கே அணி கூட தங்களின் எக்ஸ் தளத்தில் இது பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.