பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்கள் உற்சாக மோடிற்கே சென்று விட்டனர். அதுவும் ஐபிஎல் தொடரில் பலரின் ஃபேவரைட் அணியாக திகழும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை இன்னும் திக்கு முக்காட வைத்திருந்தது.
ஆனால், அதே வேளையில், ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாக யாரும் எதிர்பாராத ஒரு முடிவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த எம். எஸ். தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் ஓய்வினை அறிவிப்பாரா என்ற கேள்வியுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது சற்று ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
அவருக்கு பதிலாக இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இது தோனி எடுத்த முடிவு என தெரிய வந்ததால் இளம் தலைமுறை வீரர்களுக்காக எடுத்த சிறந்த முடிவு என்றும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தோனி கலக்குவார் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதற்கிடையே, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட வந்த ருத்துராஜ் பேசி இருந்த விஷயங்களும் அதிக கவனம் பெற்றிருந்தது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்றிருந்த ஆர்சிபி, பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டு இணைந்த முஸ்தாபிசுர், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி, முஸ்தாபிசுர் பந்து வீச்சில் சிக்கித் திணறியது என்றே சொல்லலாம். பாப் டு பிளெஸ்ஸிஸ், ராஜத் படிதார் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்த முஸ்தாபிசுர், இதே போல கோலி, க்ரீன் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்து ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 78 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாற, பின்னர் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் சிறப்பாக ஆடி நல்லதொரு ஸ்கோரை ஆர்சிபி அணி எட்டவும் உதவி இருந்தனர்.
அவர்கள் இருவரும் இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். கேப்டன் ருத்துராஜ் 15 ரன்களில் அவுட்டானார்.
இதன் பின்னர் ரச்சின் ரவீந்திராவும் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். தொடர்ந்து ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால், கடைசி கட்டத்தில் போட்டியும் பரபரப்பானது. ஜடேஜா மற்றும் ஷிவம் துபே களத்தில் இருக்க, கடைசி ஐந்து ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா மற்றும் துபே இணைந்து நேர்த்தியாக ஆட விறுவிறுப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, ஒரு பெரிய விஷயத்திற்காக தயாராக இருங்கள் என குறிப்பிட்டிருந்தார் தோனி. அவர் சொன்னது போலவே, இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து மாறி ருத்துராஜை நியமித்தார். அது மட்டுமில்லாமல், ஒரு வருடத்திற்கு முன்பே தோனி இந்த முடிவை எடுத்த போதிலும் அதனை ருத்துராஜிடம் தெரிவிக்காமல், அவரை தயார் செய்து ஒரு வாரத்திற்கு முன்பு தான் தெரிவித்தாராம் தோனி.
இளம் வீரரை மெல்ல மெல்ல தயார் செய்து இந்த சீசனை சிஎஸ்கே வெற்றியுடனும் தொடங்க உதவி செய்துள்ளார் தோனி.