இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் சட்டீஸ்வர் புஜாரா. இந்திய டெஸ்ட் அணயில் ராகுல் டிராவிட்டுக்கு பின் 3வது பேட்டிங் வரிசை புஜாராவுக்கு சொந்தமானது. ராகுல் டிராவிட் விட்டுச் சென்ற இடத்தில் எந்தவித சிரமும் இல்லாமல் புஜாரா சிறப்பாக நிரப்பினார். ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு பின் புஜாராவின் பேட்டிங் ஃபார்மில் பிரச்சனை வந்தது.
அதன்பின்னர் சில போட்டிகளில் புஜாராவை நீக்கிவிட்டு, இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி ஆடியது. இருப்பினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் புஜாராவுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியிலும் புஜாரா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
இதன் காரணமாக புஜாரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ளார். சசக்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் புஜாரா, சிறந்த பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் புஜாரா விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புஜாராவின் வாழ்க்கையில் ஸ்பீட் பிரேக்கர் போடும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புஜாராவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சசக்ஸ் அணிக்கும் 12 புள்ளிகள் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு செப்.13ஆம் தேதி நடைபெற்ற லெய்செஸ்டைஷயர் அணிக்கு எதிரான போட்டியின் போது சசக்ஸ் அணி வீரர்கள் கட்டுப்பாடின்றி செயல்பட்டதே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக் சசக்ஸ் அணியின் 4 வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவுண்டி கிரிக்கெட் தொடர் மூலம் இந்திய அணிக்கு திரும்பலாம் என்று விளையாடி வரும் புஜாரா, இங்கிலாந்திலும் சர்ச்சையில் சிக்கி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.