வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான கிரிஸ் கெயில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 301 ஒருநாள் போட்டிகள், 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 79 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 140 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுவரை தனது ஓய்வு முடிவை அறிவிக்காத கிரிஸ் கெயில் தற்போது தனது ஓய்வு குறித்த சில தகவல்களையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது .இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை தகுதிசுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிராக 324 ரன்கள் அடித்தும் கூட அவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணியின் மோசமான நிலையை காட்டுகிறது. மேலும் இந்த தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை தொடருக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலை குறித்து பேசிய கெயில் கூறுகையில் : தகுதிச்சுற்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் மோசமான ஒன்று. எங்களது அணியால் தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தந்துள்ளது.
ஒருவேளை இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் எங்களது அணி விளையாடவில்லை என்றால் அது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தரும் என்று கெயில் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனிமேல் நான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேனா? என்பது குறித்து யோசிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை பிறகு எனக்கு ஃபேர்வெல் போட்டி நடைபெறும் என்று நினைத்தேன்.
ஆனால் இனி அது நடைபெற வாய்ப்பே இல்லை என்று உணர்ந்து கொண்டேன். அது நடக்கும் என்றும் நான் யோசிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் நான் ஓய்வை அறிவிக்கவில்லை ஆனால் மீண்டும் நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.