சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் இடம் பிடித்திருந்த இளம் வீரர் ஒருவர் கடந்த ஐந்து நாட்களில் முதல் தர கிரிக்கெட்டில் செய்த ஒரு சம்பவம் அந்த அணி ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையும் மெகா ஏலம் நடைபெறும். அப்படி நடைபெறும் போது அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கழற்றி விடுவதுடன் மட்டுமில்லாமல் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற்றிருந்தது. இதில் ஆறு வீரர்கள் வரை அதிகபட்சமாக தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருடன் சேர்த்து ஐந்து வீரர்களை மீண்டும் தக்க வைத்திருந்தது. தோனி, பதிரானா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் ஆகிய ஐந்து பேரும் தக்கவைக்கப்பட்டனர்.
சிஎஸ்கேவில் இடம்பிடித்திருந்த இந்திய அணியின் இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி வெளியேற்றி இருந்தது. இவர் கடந்த சீசனில் சென்னை அணிக்காக ஒரு சில போட்டிகள் களமிறங்கி வந்த சமயத்தில் அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஐபிஎல் அரங்கில் தான் அடித்த முதல் ரன்னையே ரஷீத் கானுக்கு எதிராக சிக்சராக பறக்கவிட்டு தொடங்கி இருந்தார்.
ஆனாலும் அந்த வாய்ப்பை சமீர் ரிஸ்வி பெரிதாக தக்க வைத்துக் கொள்ளவில்லை. தோனியின் வெறித்தனமான ரசிகரான சமீர் ரிஸ்வியை சென்னை அணி ஏலத்துக்கு முன்பாக விடுவித்திருந்த நிலையில் அடுத்த சீசனுக்காக டெல்லி அணியும் அவரை சொந்தமாக்கி உள்ளது. அப்படி ஒரு சூழலில் உத்தர பிரதேச வீரரான சமீர் ரிஸ்வி, அந்த அணிக்காக U 23 லிஸ்ட் ஏ தொடரில் ஆடி வருகிறார்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விதர்பா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 105 பந்துகள் எதிர் கொண்ட சமீர் ரிஸ்வி, 202 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து தற்போது அதே தொடரில் திரிபுரா அணிக்கு எதிராக 97 பந்துகளில் 201 ரன்களை சமீர் ரிஸ்வி குவித்துள்ளார்.
ஐந்து நாட்கள் இடைவெளியில் மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு முறை இரட்டைச் சதம் அடித்துள்ள சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி தவறவிட்டதாகவும் அந்த அணியின் ரசிகர்கள் வேதனையில் பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.