கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 ஆவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் லீக் போட்டிகள் முடிந்து ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகள் தங்கள் வெற்றிக்காக போராடி வருகின்றன.
ஐபிஎல் போட்டிகளால் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் அணிகள் மற்றும் அணி வீரர்கள் பற்றிய செய்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகள் மற்றும் வீரர்கள் சார்பாக காரசாரமாக விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் ஆசிய அளவில் பிரபலமாக இருந்த விளையாட்டு அணிகள் பட்டியலில் நான்கு ஐபிஎல் அணிகள் இடம்பெற்றுள்ளன. டிபோர்ட்ஸ் மற்றும் ஃபைனான்சாஸ் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டிவிட்டரில் அதிக அளவில் நடந்த இண்ட்ராக்ஷன் அடிப்படையில் இந்த அணிகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.9 மில்லியன் பதிவுகளோடு முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (4.85 மில்லியன்), மூன்றாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்(3.85 மில்லியன்) உள்ளன. இதற்கடுத்த இடங்களில் அல் நாசர் கால்பந்தாட்ட அணி (3.50 மில்லியன்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2.31 மில்லியன்) ஆகிய அணிகள் உள்ளன.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்போதுமே, இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக உள்ளது. அதுவும் இந்த சீசனில் தோனி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த அணிக்கு மைதானத்திலும், சமூகவலைதளங்களிலும் கூடுதல் ஆதரவு கிடைத்து வருகிறது. இப்படியான சூழலில் இந்த குறிப்பிட்ட பட்டியலின் முடிவு சி.எஸ்.கே ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.