தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அதோடு ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்து உள்ளது. தோனியின் தலைமையிலான சென்னை அணி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாமல் இருந்து வருவது அனைவரது மத்தியிலும் ஒரு விவாத்தை எழுப்பி வருகிறது.
ஏனெனில் திறமையான தமிழக வீரர்கள் மற்ற ஐ.பி.எல் அணிகளுக்காக விளையாடும் வேளையில் சென்னை அணி அவர்களை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் அசத்தி வரும் தமிழக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் ஒரு வாய்ப்பினை வழங்கலாம் என்றும் குறிப்பாக இந்த டிஎன்பிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் 3 வீரர்களுக்கு சென்னை அணியில் பொருந்தக்கூடிய இடங்கள் இருப்பதினால் அவர்களை தேர்வு செய்யலாம் என்றும் சில கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் அசத்தும் மூன்று தமிழக வீரர்கள் பட்டியல் இதோ :
1) ஷாருக்கான் – பஞ்சாப் கிங்ஸ் : கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக அதிரடி வீரரான ஷாருக் கான் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சோபிக்க தவறினார். இதன் காரணமாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பினை பெற்று பல போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தும் ஷாருக்கான் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக அணிக்குள் கொண்டு வந்தால் அது ஒரு சரியான முடிவாக இருக்கும். எனவே சிஎஸ்கே அணி இவரை டிரேடிங் முறையில் பஞ்சாப் அணியிடம் இருந்து மாற்றிக் கொள்ளலாம்.
2) சோனு யாதவ் – ஆர்.சி.பி : வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டான இவர் கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பின் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டுவது என அசத்தி வரும் இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கூடுதல் பந்துவீச்சாளராக சி.எஸ்.கே அணியில் இருக்கலாம் என்பதனால் பேக்கப் வீரராக கூட சென்னை இவரை பெங்களூரு அணியிடம் இருந்து ட்ரேடிங் செய்து வைத்தால் அது சரியான ஒரு முடிவாக இருக்கும்.
3) முருகன் அஸ்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் : தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ வீரரான முருகன் அஸ்வின் ஏற்கனவே பல்வேறு முதல் தர போட்டிகளில் அசத்தியுள்ள வேளையில் சென்னை அணியில் தற்போது சரியான லெக் ஸ்பின்னர் இல்லாத காரணத்தினால் இவரை ராஜஸ்தான் அணியில் இருந்து டிரேடிங் செய்தால் அது சென்னை அணிக்கு சாதகமான ஒரு முடிவாக இருக்கும். ஏனெனில் மும்பை அணிக்காக அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா அசத்திவரும் வேளையில் அவரைப்போன்றே முருகன் அஸ்வின் சென்னை அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.