இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நெருங்கியுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இவ்வேளையில் எஞ்சியுள்ள அணிகளில் எந்த அணிகள் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள வேளையில் எஞ்சியுள்ள மூன்று இடங்களுக்குமான போட்டி பலமாக நிலவி வருகிறது.
இந்த பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த பலத்த போட்டிக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் டெல்லி அணியிடம் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.
அதன் காரணமாக பஞ்சாப் அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று கூறலாம். அவர்கள் எஞ்சியுள்ள கடைசி போட்டியில் வெற்றிபெற்றால் கூட அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாது. அதே வேளையில் இன்று நடக்கும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தால் அவர்களும் பிளே ஆப் சுற்ருக்கான வாய்ப்பினை இழக்க நேரிடும்.
இதையும் படிக்கலாமே: தோனியின் பந்து வீச்சில் அவுட் ஆன முதல் ஆள் நானா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட கெவின் பீட்டர்சன்
இன்று நடைபெறும் இந்த ஒரு போட்டியின் முடிவில் நிச்சயம் அனைத்து இடங்களுக்கான தீர்வுகளும் கிடைக்கும் என்பதனால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இன்று பெங்களூரு அணி தோற்று சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று விடுவார்கள். ஒருவேளை பெங்களூரு அணி வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்கான போட்டி இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.