மே 29, திங்கட்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 16வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கில் ஐந்தாவது முறை சாம்பியன் பட்டத்தை சூடியது.
சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை தோனி தலைமையில் வென்றுள்ளது. அடுத்த ஆண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடி கோப்பையை வென்றால் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையைத் சென்னை அணி தகர்க்கும்.
இறுதி போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்காக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணியின் இலக்கு என்பது கடினமான ஒன்றாக அமைந்தது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், சென்னை அணி அதிரடியாக விளையாடி, கடைசி ஓவரின் திக் திக் நிமிட பரபரப்புக்குப் பின்னர் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை சேர்ந்த ஜடேஜா கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணிக்கான வெற்றி ரன்களை குவித்து அசத்தினார்.
கோப்பையை வென்றதில் இருந்து சிஎஸ்கே அணியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த நிலையில் சென்னைக்கு ஐபிஎல் கோப்பை எடுத்து வரப்பட்டுள்ளது. அணி வீரர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மட்டுமே இப்போது சென்னையில் உள்ளார். விரைவில் அணி வீரர்கள் சென்னைக்கு அழைத்து வந்து கௌரவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதையும் படிக்கலாமே: பைனலில் கடைசி ஓவர் வீசுவதற்கு முன்பு நான் யோசிச்சது இது தான். எல்லா பந்தையும் இந்த மாதிரி வீசுனு என்னுடைய உள்ளுணர்வு சொல்லுச்சு. என்னால இப்போ தூங்கவே முடியல – மோஹித் சர்மா பேச்சு
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு சென்று ஐபிஎல் கோப்பைக்கான சிறப்பு பூஜை நடத்தினார். பூஜையின் புகைப்படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.