சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7-ல் வெற்றியும் 5-ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
ஆனால் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்ல முடியாத அளவுக்கு வாய்ப்புகளும் உள்ளன. அடுத்து வரும் கடைசிப் போட்டியை சிஎஸ்கே தோற்கும் பட்சத்தில் அது நடக்கலாம். அதற்கு மும்பை அல்லது லக்னோ ஒரு போட்டிகளில் வென்றாலோ அல்லது பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளிலும் வென்றாலோ அந்த அணிகளில் ஒன்று ப்ளே ஆஃப் சென்று சென்னை அணியின் வாய்ப்பு பறிக்கப்படும்.
இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “சிஎஸ்கே இன்னும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தகுதி பெறாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன” என கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் நேற்று முன் தினம் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பரிதாப தோல்வியை தழுவியது. சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் தோல்விக்குப் பின் பேசிய தோனி “நாங்கள் முதல் பந்து வீசும்போதே இது 180 ரன்கள் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெறக் கூடிய விக்கெட் இது என புரிந்துகொண்டேன். அதனால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தவறான ஒன்று என நினைத்தேன். மைதானத்தில் பனிப்பொழிவு இல்லாதது மிகப்பெரிய காரணியாக அமைந்தது” எனக் கூறினார்.
ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார் தோனி. ஒரே அணிக்காக 200 போட்டிகளுக்கு மேல் அவர் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்துள்ளார். தற்போது 41 வயதாகும் தோனி, ஐபிஎல் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடைய வீரராக இருந்து வருகிறார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த சீசனோடு அவர் ஓய்வை அறிவிப்பார் என கருத்துகள் எழுந்துள்ளன. அதனால் இந்த முறை எப்படியும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்று அவரை வெற்றியோடு வழியனுப்ப வேண்டுமென்ற ஆசை சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.