இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி, ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்த இரண்டு அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஒன்று. ஆனால் கண்கெட்ட பிறகு சூர்யவணக்கம் செய்வது போல நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்தாடி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணியின் தொடர் தோல்விக்குக் காரணம் அந்த அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வந்ததுதான்.
குறிப்பாக அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா தொடர்ந்து 7 போட்டிகளாக பெரிதாக ரன் சேர்க்க முடியாமல் தவித்தார். அதனால் அவரை சில போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைத்தனர். நேற்றைய போட்டியில் அணிக்குள் திரும்பிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இதே போல டேவிட் வார்னர், ரைலே ரூஸோ ஆகியோரும் பார்முக்கு திரும்பியுள்ளனர்.
இந்த ஃபார்மின் மூலமாக நேற்றைய போட்டியில் விளையாடி இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 213 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்த பிருத்வி ஷா, வார்னர், ரூஸோ, சால்ட் ஆகிய நால்வருமே அதிரடியில் புகுந்து விளையாடினர். அதுபோல பந்துவீச்சிலும் இஷாந்த் ஷர்மா, நோர்ட்யே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் அணியை 198 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ஒட்டுமொத்தமாக படுபாதாளத்தில் இருந்த டெல்லி அணி இப்போது எழுச்சியடைய ஆரம்பித்துள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் “நாங்கள் எங்கள் பலத்தை அறிந்துகொண்டோம். சில போட்டிகள் எங்கள் சொந்த மைதானத்தில் மிகவும் சவாலாக அமைந்தன. எங்கள் சொந்த மைதானத்தில் இது போல தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது. இன்றைய போட்டியில் 2 புள்ளிகளைப் பெற்றது சந்தோஷம். எங்கள் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியையும் வெற்றியோடு முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.
டெல்லி அணிக்கு அடுத்த போட்டி சிஎஸ்கே அணியோடு. சிஎஸ்கே இந்த போட்டியை வென்றால்தான் எந்த குழப்பமும் இல்லாமல் நேரடியாக ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும். இல்லையென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காக காத்திருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தோனி செய்ததை இப்போது நாமும் செய்ய ஆரமித்துள்ளேன் – டு பிளஸ்சி கருத்து
சொந்த மைதானத்தில் பார்முக்கு திரும்பியுள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டி கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு பலப்பரிட்சையாகதான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால் இந்த போட்டியை வெல்வது சிஎஸ்கே அணிக்கு எளிதான ஒன்றாக இருக்காது என்று மட்டும் உறுதியாக சொல்லலாம்.