சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. மும்பை அணி பெற்ற இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
அவர் நேற்றைய போட்டியில் 3.3 ஓவர்கள் மட்டுமே வீசிய வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இப்படி ஒரே இரவில் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த ஆகாஷ் மத்வால் யார் என்பது குறித்த தேடலில் தற்போது ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகாஷ் மத்வால் குறித்த சில தகவல்களை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்தவகையில் பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால் கிரிக்கெட்டின் மீது இருந்த காதல் காரணமாக தொடர்ச்சியாக டென்னிஸ் பந்தில் விளையாடி வந்திருக்கிறார். தற்போது 29 வயதாகும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்முறையாகவும் கிரிக்கெட்டை விளையாடி வந்திருக்கிறார்.
ரிஷப் பண்டின் சொந்த ஊர் தான் அவருக்கும் சொந்த ஊர். எனவே ரிஷப் பண்டின் அறிவுரை காரணமாகவே அவர் தற்போது தொழில்முறை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமான அவர் தனது அதிவேகப்பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தனது அதிவேக பந்துவீச்சினால் சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாடிய அதே ஆண்டு ரஞ்சிப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார். ஆனாலும் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து அவர் ஐபிஎல் தொடரில் தாமதமாக அறிமுகமாகி இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகாஷ் மத்வாலிடம் இருந்த திறமையை பார்த்த ஆர்சிபி அணி அவரை நெட் பவுலராக பயன்படுத்தியது. ஆனாலும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
அதே வேளையில் கடந்த ஆண்டு மும்பை அணியின் நெட் பவுலராக ஆகாஷ் மத்வாலை தேர்ந்தெடுத்த மும்பை அணியானது அவரிடம் இருக்கும் திறமைகளை பார்த்து அவரை ஏலத்தில் 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலையில் எடுத்தது. இப்படி ஏலம் எடுக்கப்பட்ட அவர், நடப்பு சீசனில் முதல் பாதியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் வெளியில் அமர வைக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: கோலிய போய் தொடலாமா? இப்போ ஊரே ஒன்னு கூடிட்டாங்களே. லக்னோ அணியின் தோல்விக்கு பிறகு நவீன் உல் ஹக்கை கலாய்த்து தள்ளும் பிற அணி வீரர்கள். மாம்பழமே வேண்டாம் என ட்வீட் போட்ட லக்னோ
இந்நிலையில் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாதியில் மும்பை அணி அவருக்கு வாய்ப்பினை வழங்கியது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பிடித்துக் கொண்ட ஆகாஷ் மத்வால் தீவிர பயிற்சி மற்றும் கிரிக்கெட் மீதுள்ள காதலால் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த ஆண்டு மும்பை அணி கண்டறிந்த திலக் வர்மா, நேஹல் வதேரா போன்ற வீரர்களுடன் ஆகாஷ் மத்வாலும் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மும்பை அணியில் பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.